மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியது உக்ரைன் ராணுவமா?

கோலாலம்பூர் : மலேசிய ஏர்லைன்சிற்கு சொந்தமான எம்.ஹச்.17 பயணிகள் விமானம், ரஷ்ய எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது உறுதியாகி உள்ள நிலையில் அதனை தாக்கியது யார் என்ற குழப்பம் எழுந்துள்ளது. ராணுவத்திற்கு சொந்தமானது என நினைத்து கிளர்ச்சியாளர்கள் தான் விமானத்தை சுட்டு வீழ்த்தினர் என உக்ரைன் ராணுவத்தினரும், ராணுவத்தினர் தான் சுட்டு வீழ்த்தினர் என கிளர்ச்சியாளர்களும் மாறி மாறி குற்றம்சாட்டி உள்ளது குழப்பத்தை அதிகரிக்க செய்துள்ளது.
விமான விபத்து : மலேசிய ஏர்லைன்சிற்கு சொந்தமான 777 போரிங் ரக எம்.ஹச்.17 பயணிகள் விமானம், நேற்று மாலை நெதர்லாந்தில் இருந்து கோலாலம்பூரிற்கு புறப்பட்டு சென்றது. இந்த விமானம் ரஷ்ய எல்லையை கடந்த போது கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் விமானத்தில் பயணம் செய்த பயணிகள், ஊழியர்கள் உள்ளிட்ட 298 பேரும் உடல் கருகி பலியாகினர். இவர்களில் 154 பேர் டச்சுக்கார்கள் எனவும், 43 பேர் மலேசியர்கள் எனவும், 35 பேர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள் எனவும் மலேசிய விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் 41 பேர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விபரம் ஏதும் தெரியவில்லை.விமானத்தில் குழந்தைகள் சிலரும், அமெரிக்கர்கள் 23 பேரும் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான இடத்தில் நூற்றுக்கணக்கான உடல்கள் சிதறி கடக்கின்றன. உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
தாக்கியது யார் : விபத்திற்குள்ளான விமானத்தை பயங்கரவாதிகள் வெடித்துச் செய்ததாகவோ அச்சுறுத்தலோ அல்லது மர்ம உரையாடல்கள் ஏதும் இல்லை என மலேசிய விமான நிலைய நிர்வாகம் உறுதி செய்துள்ளது. ரஷ்ய எல்லை அருகே வந்த போது தான் விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உக்ரைன் ராணுவத்திற்கு சொந்தமான விமானம் என நினைத்து கிளர்ச்சியாளர்கள் தான் அதனை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் ரேடார் எல்லையை கடந்து 10,000 மீட்டர்களுக்கு பிறகே விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், உக்ரைன் ராணுவத்தினர் தான் விமானத்தை சுட்டு வீழ்த்தி விட்டு தங்கள் மீது பழி போடுவதாக கிளர்ச்சியாளர்கள் மறுத்துள்ளனர். இதனால் விமானத்தை சுட்டது யார், 298 உயிர்கள் பலியாக காரணமானவர்கள் யார் என்ற குழப்பம் அதிகரித்துள்ளது.
விசாரணைக்கு உத்தரவு : விமான விபத்து குறித்து உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மலேசிய பிரதமர் தெரிவித்துள்ளார். விபத்திற்கான காரணம் குறித்து கண்டறிய தேசிய பாதுகாப்பு குழுவின் உதவியை தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஒபாமாவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மலேசிய மற்றும் ரஷ்ய பிரதமர்களை அழைத்தும் ஒபாமா ஆலோசனை நடத்தி உள்ளார். ஏவுகணை வீசியே விமானம் தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் விபத்து நடந்த வழிதடத்தை பயன்படுத்த வேண்டாம் என விமான நிறுவனங்களுக்கு சர்வதேச விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது. ஆபத்தை தவிர்த்த மோடி விமானம்: ஆம்ஸ்டர்டாமில் இருந்து வந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், ரஷ்ய எல்லையில், உக்ரைன் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில், 280 பயணிகள், 15 ஊழியர்கள் பலியாகி உள்ளனர். பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு ஜெர்மன் வழியாக பிரதமர் நரேந்திரமோடி நாடு திரும்பும்போது, மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பாதையில்தான் வருவதாக இருந்தது. இருப்பினும் ஜெர்மனியிலிருந்து மோடி விமானம் புறப்படும் முன், இந்த தகவல் கிடைதத்தால், மாற்றுப்பாதையில் இந்தியா வந்தது அவருடைய விமானம். மேலும், மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட நேரத்தில், அந்த இடத்தில் இருந்து 25 கி.மீ., தொலைவில் ஏர் இந்தியா விமானமும், அடுத்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானமும் வந்து கொண்டிருந்தன என்றும், அதிர்ஷ்டவசமாக இந்த இரு விமானங்களும் தப்பி உள்ளன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.