சென்னைத் தமிழர் இலங்கையில் செதுக்கிய பெரிய புத்தர் சிலை

150502163321_lanka_buddha_statue_640x360_bbc_nocreditசென்னையைச் சேர்ந்த சிற்பி (ஸ்தபதி) ஒருவர் வடிவமைத்து ஒரே கல்லில் 67.5 அடி உயரத்தில் செதுக்கப்பட்ட புத்தர் சிலை இலங்கையின் குருநாகல் மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ளது.

ரம்பொடகல மகாவிகாரையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த புத்தர் சிலைதான் உலகிலேயே மிகப்பெரிய ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சமாதி நிலை புத்தர் சிலை.

இந்த சிலையை இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திரைநீக்கம் செய்துவைத்தார்.

இந்தச் சிலையை, தமிழகத்தைச் சேர்ந்த மூத்த ஸ்தபதியான எம். முத்தைய்யா வடிவமைத்து உருவாக்கியிருக்கிறார்.

ரம்பபொடகலவில் உள்ள ஒரு மலைக்குன்றை தேர்வுசெய்து, அதில் புத்தர் சிலையை வடிக்கும் பணிகள் 2002ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி துவங்கின.

இது மிகக் கடினமான பணியாக இருந்தது என்கிறார் ஸ்தபதி முத்தையா. சாரம் அமைப்பதற்கான இரும்புக் கம்பிகள்கூட அந்தத் தருணத்தில் இல்லை என்பதால், அருகில் இருந்த பாக்கு மரங்களை வெட்டி சாரங்களை அமைத்ததாகக் கூறினார் அவர்.

இந்த சிலையை வடிப்பதற்காக பெரும்பாலான சிற்பிகள் தமிழகத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர். துவக்கத்தில் மிகச் சிறிய அளவிலான நிதியுடன் இந்தச் சிலைக்கான பணிகள் துவங்கப்பட்டன. பின்னர் பொதுமக்கள், அரசு அமைப்புகள், மத அமைப்புகள் என நிதி திரட்டப்பட்டு இந்த சிலைக்கான பணிகள் தீவிரமடைந்தன.

தமிழ்நாட்டின் தென்காசி கோவில் கோபுரம் உள்ளிட்ட பல கோவில்களைக் கட்டியிருக்கும் முத்தையா, இலங்கையின் நுவரெலியாவில் ஒரு கோவிலுக்காக ஹனுமன் சிலை ஒன்றையும் வடிவமைத்தார்.

அப்போதுதான் இந்த புத்தர் சிலையை வடிக்கும்படி மொனராகல விகாரையிலிருந்து முத்தையாவுக்கு அழைப்பு வந்தது. ஒரு இந்துவாக இருந்தும் புத்தர் சிலையை தான் வடிவமைத்ததில் பலருக்கும் மகிழ்ச்சி தான் என்றார் முத்தையா.

2002லிருந்து 2015 வரை நடைபெற்ற இந்த சிலையை வடிக்கும் பணிகளுக்காக பலமுறை இலங்கை சென்று திரும்பியிருக்கிறார் முத்தையா.

சுமார் 5 முதல் 6 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த சிலை வடிக்கப்பட்ட காலத்தில் இலங்கை பல மாற்றங்களைச் சந்தித்தது. உள்நாட்டுப் போர் நடந்து முடிந்தது. ஆனால், அதனால், சிலை செய்யும் பணிகள் பாதிக்கப்படவில்லை என்றார் அவர்.

தற்போது சமாதி நிலையில் வடிக்கப்பட்டிருக்கும் புத்தரின் முகம் மட்டும் சுமார் 16 அடி உயரம் கொண்டது. இந்தச் சிலையை நின்ற நிலையில் வடிவமைத்தால் அது சுமார் 130 அடி உயரத்தைக் கொண்டிருக்கும் என்கிறார் முத்தையா.

2001ல் பாமியான் புத்தர் சிலைகள் அழிக்கப்பட்டதையடுத்தே, இவ்வளவு பெரிய அளவில் புத்தர் சிலையை வடிக்கும் திட்டம் உருவாக்கப்பட்டதாக இத்திட்டம் குறித்த கையேடு ஒன்று கூறுகின்றது.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.