கல்முனைத் தமிழர்களின் சம்மதம் இல்லாமல் அவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் உத்தேச கல்முனை நகர அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் முனைப்புக் காட்டுகின்ற சமகாலத்தில், சாய்ந்தமருதுக்கென தனியான உள்ளூராட்சி அலகொன்றை ஏற்படுத்தும் முயற்சியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த இரு விடயங்களும் கல்முனைத் தமிழர்களின் ஆணிவேரை அறுத்தெறிந்து அவர்களின் சமூகப் பொருளாதார அரசியல் இருப்பைக் கேள்விக்குறியாக்கும் நோக்கங்களைக் கொண்டதாகும்.
உத்தேச கல்முனை நகர அபிவிருத்தித்திட்டம் கல்முனை தமிழர்களின் சம்மதமில்லாமல் முன்னெடுக்கப்படக் கூடாது என்பதும் சாய்ந்தமருதுக்கென தனியான உள்ளூராட்சி அலகு ஏற்படுத்தப்படுவதற்கு முன்னர் கல்முனை தமிழர்களின் நீண்ட காலக் கோரிக்கைகளாக இருந்து வருகின்ற கல்முனை தமிழ் உபபிரதேச செயலகத்தை கல்முனை வடக்கு பிரதேச செயலகமாக தரமுயர்த்தும் நடவடிக்கையும் அதனோடு கூடியதாக கல்முனை தமிழர்க்கென கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் எல்லைகளை அடிப்படையாக வைத்து தனியான தமிழ்ப்பெரும்பான்மை உள்ளூராட்சி அலகொன்றும் உருவாக்கப்பட வேண்டும் என்பதும் கல்முனை தமிழர்களின் நியாயமான எதிர்பார்ப்புக்கள் ஆகும்.
கல்முனை தமிழர்களுக்கென தனியான உள்ளூராட்சி அலகின் அவசியம் ஏன் என்பதற்கான காரணங்களை வரலாற்று ரீதியாக முன்வைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கல்முனை மற்றும் கல்முனைக் குடி என்பன இரு வெவ்வேறு தனி கிராமங்களாகும். மட்டக்களப்பு கச்சேரியிலுள்ள பதிவேடுகளின்படி கல்முனைப் பட்டினமானது ஆரம்பத்தில் நூறு வீத தமிழர்களையே கொண்டிருந்தது. கல்முனைப் பட்டினமானது வடக்கே தமிழ்க் கிராமமான பாண்டிருப்பையும் தெற்கே முஸ்லிம் கிராமமான கல்முனைக்குடியையும் கிழக்கே வங்காள விரிகுடா கடலையும் மேற்கே கிட்டங்கி வாவியையும் எல்லைகளாகக் கொண்டு விளங்கிற்று. கல்முனைப் பட்டினத்தின் வடக்கு எல்லை தாளவட்டுவான் வீதியும் தெற்கு எல்லை தரவைப் பிள்ளையார் கோயில் வீதியும் ஆகும். கல்முனை பட்டினம் மூன்று கிராமத்தலைவர்கள் பிரிவுகளாகப் (Village Head man’s Division) பிரிக்கப்பட்டிருந்தது. கல்முனையையும் கல்முனைக் குடியையும் பிரிக்கும் எல்லையாக சுமார் 400 வருடங்கள் பழைமை வாய்ந்த தரவைப்பிள்ளையார் கோயிலின் முன்னால் கிழக்கே கடற்கரை நோக்கிச் செல்லும் தரவைப்பிள்ளையார் கோயில் வீதியே விளங்கிற்று.
பொது மராமத்து இலாகாவினால் (Public Works Department) நிர்மாணிக்கப்பட்ட கல்முனை பெயர்ப் பலகை முன்பு பிரதான வீதியில் தரவைப்பிள்ளையார் கோயிலுக்கு அருகில் இருந்தது இப்பெயர்ப்பலகை பின்பு அப்போதைய கல்முனைத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினரின் அனுசரணையுடன் திட்டமிட்ட முறையிலே தெற்கு நோக்கி கல்முனை சாஹிரா கல்லூரி வளவுக்கு முன்னால் நகர்த்தப்பட்டது. கல்முனைக் குடியை கல்முனையுடன் இணைத்து எதிர்காலத்தில் முஸ்லிம் பெரும்பான்மை கிராமமான கல்முனை குடியையும் கல்முனை பகுதியாக சித்தரித்துக் கல்முனைப் பட்டினத்தில் தமிழர்களை சிறுபான்மையாக்கும் திட்டத்தின் முதல் அங்கமே மேற்கூறப்பட்ட பெயர்ப்பலகை நகர்த்தப்பட்ட நிகழ்வாகும்.
கல்முனைப் பட்டினம்
1892ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க கட்டளைச் சட்டத்தினால் நிறுவப்பட்ட உள்ளூர் சபை ஒன்றினால் சுகாதார நலன் பேணும் சபை (Sinitory Board) நிர்வகிக்கப்பட்டது.
1947ஆம் ஆண்டு வரை கல்முனை மூன்று கிராம சேவையாளர் பிரிவுகளை (குறிச்சிகளை) கொண்டிருந்தது. இம்மூன்று குறிச்சிகளும் (1ஆம் 2ஆம் 3ஆம் குறிச்சிகள்) தமிழர்களையே கொண்டிருந்தன. பின்பு 1946ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க பட்டின சபைகள் கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் ‘Sinitory Board’ இதற்கு பதிலாக கல்முனைப் பட்டினச்சபை (Town Council) 1948இல் உருவாக்கப்பட்ட போது கல்முனை தெற்கு கல்முனைக்கு அடுத்ததாய் 4 பிரிவுகளை (குறிச்சிகளை) கொண்டிருந்த கல்முனைகுடி முஸ்லிம் கிராமமும் கல்முனை தமிழ் கிராமத்துடன் இணைக்கப்பட்டு 7 வட்டாரங்களுடன் (Wards) கல்முனையானது ‘கல்முனைப்பட்டினச் சபையாக’ பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த செயற்பாட்டின் போது கல்முனைக்கு வடக்கே மிக அண்மித்ததாய் அமைந்த பாண்டிருப்பு, சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை போன்ற தமிழர் வாழ் கிராமங்கள் ‘கல்முனை பட்டினச் சபை’ யின் கீழ் கொண்டு வரப்படவில்லை. ‘கல்முனைப் பட்டினசபை’ யில் தமிழர்களை சிறுபான்மையினராக்கும் திட்டத்தில் அடுத்த அங்கமே இது. மேலும், கல்முனை பட்டினசபை’ க்குரிய வட்டாரங்கள் Wards பிரிக்கப்பட்ட வேளைகளிலும் கல்முனை தமிழர்களுக்கு பாரபட்சம் இழைக்கப்பட்டது. வட்டாரங்கள் பிரிக்கப்பட்ட போது கல்முனை 3ஆம் குறிச்சியை மாரியார் வீதி எனப்படும் வீதியாய் இரண்டாகப் பிரித்து வடக்கே உள்ளவர்களைக் கல்முனை 2ஆம் குறிச்சியுடன் சேர்த்து ஒரு வட்டாரத்திற்குள்ளும் தெற்கே உள்ளவர்களைக் கல்முனைக் குடியுடன் சேர்த்து வேறொரு வட்டாரத்திற்குள்ளும் அடக்கினார்கள்.
இதனால் கல்முனை 3ஆம் குறிச்சி தமிழர்கள் இரண்டு வெவ்வேறு வட்டாரங்களில் பங்கு போடப்பட்டார்கள். கல்முனை பட்டின சபையில் தமிழ் உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் திட்டமே இது. இதனால் கல்முனைப் பட்டின சபையில் 7 வட்டாரங்களில் இரண்டு வட்டாரங்கள் தமிழ்ப் பெரும்பான்மையாகவும் 5 வட்டாரங்கள் முஸ்லிம் பெரும்பான்மையாகவும் வருமாறு திட்டமிட்டு வகுக்கப்பட்டன.
முன்பு கல்முனைக்கு தெற்கே தரவைப்பிள்ளையார் கோவில் வீதிக்கும் தற்போது செயிலான் வீதி என அழைக்கப்படும் வீதிக்கும் இடைப்பரப்பில் பிரதான வீதியை அண்டி தரவைப்பிள்ளையார் கோயிலுக்கான மடமும் அதற்குரிய வளவும் அதனைச்சுற்றி சுமார் 100 தமிழ்க் குடும்பங்களும் இருந்தன. இப்பகுதியில் வாழ்ந்த தமிழர்களுக்கு கல்முனை 3ஆம் குறிச்சி கிராமத்தலைவரே கடமைகள் செய்து வந்தார்.
முதலாவதாக நடந்த கல்முனைப் பட்டின சபைத் தேர்தலின் போது கட்டவிழ்த்து விடப்பட்ட காடைத்தனத்தினால் தரவைப்பிள்ளையார் கோயில் வீதிக்கும் செயிலான் வீதிக்கும் இடையில் வாழ்ந்த தமிழ்க் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு, பயத்தினால் இடம்பெயர்ந்தன. இவர்களில் ஒரு பகுதியினர் மன்னாருக்கு சென்று குடியேறினர். இவ்வாறு இடம்பெயர்ந்த தமிழர்களின் காணிகள் முஸ்லிம்களினால் அரசியல் செல்வாக்கு மற்றும் பொருளாதார வசதிப் பின்னணியில் அளு விலைக்குக் கொள்வனவு செய்யப்பட்டன. உண்மையில் கோப்பை உடைத்தான் சந்தி என அழைக்கப்பட்டதும் தற்போது செயிலான் வீதி என அழைக்கப்படுவதுமான இடத்திலிருந்து தான் கல்முனைத் தமிழர்களின் வாழ்விடப்பிரதேசம் ஆரம்பித்து வடக்கு நோக்கி விசாலித்து இருந்தது. ஆனால் காலவரையில் இப்பகுதியை முஸ்லிம்கள் ஆக்கிரமித்து கொண்டதாலேயே தமிழர்களின் வாழ்விடப்பிரதேசம் தற்போது தரவைப் பிள்ளையார் கோயில் வீதி (தற்போது கடற்கரைப்பள்ளி வீதி) வரை தள்ளப்பட்டது.
கல்முனைப் பட்டின சபையின் முதலாவது நடவடிக்கை தமிழ்க்குறிச்சியான கல்முனை 2ஆம் குறிச்சியில் அமைந்திருந்த கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் கடற்கரையோரம் 2 ஏக்கர் நிலம் முஸ்லிம் மையவாடிக்கு (சவக்காலை) ஒதுக்கப்பட்டது. முஸ்லிம் கிராமமான கல்முனைக்குடியில் கடற்கரையோரம் நிலம் இருக்கும் போதுதான் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மட்டுமல்லாமல், கல்முனைக்குடியில் முஸ்லிம்களுக்கென்றிருந்த சந்தையை 1950இல் மூடிவிட்டு முஸ்லிம் உறுப்பினர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கல்முனைப் பட்டின சபையின் அனுசரணையுடன் கல்முனையில் அமைந்திருந்த சந்தையில் ஊடுருவி அரசியல் செல்வாக்கும் பொருளாதார பலமும் தமிழர்களுக்கு எதிரான பாரபட்சமான நடவடிக்கைகளைப் பயமின்றி மேற்கொள்வதற்கு முஸ்லிம்களுக்குத் துணை நின்றன. இப்பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் இதற்கு ஊக்கமளித்தார்கள்.
௧௯௬௭ஆம் ஆண்டு தமிழ்க் குறிச்சியான கல்முனை ௧ஆம் குறிச்சியில் கல்முனை வாடி வீட்டை அண்டிய கடற்கரைப் பகுதியின் அரச காணிகளில் இரவோடிரவாக சுமார் 300 முஸ்லிம் குடும்பங்கள் அத்து மீறிக் குடியேற்றப்பட்டு குடிசைகளும் அமைக்கப்பெற்று அப்பகுதிக்கு காரியப்பர்புரம் என்றும் பெயரிடப்பட்டது. தமிழர்கள் இதனை எதிர்த்தார்கள். அதனால் ஏற்பட்ட கலவரத்தின் போது கல்முனையின் தெற்கு எல்லையான கல்முனை 3ஆம் குறிச்சியை சேர்ந்த தமிழர்கள் தாக்கப்பட்டு பொருட்கள் நாசமாக்கப்பட்டும் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டும் அவர்கள் மீது முஸ்லிம் அரசியல்வாதிகளின் அனுசரணையோடு வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதால் அம்மக்கள் அகதிகளாகி அண்மைய தமிழ் கிராமங்களில் தஞ்சமடைந்தனர். கலவரம் அடங்கிய பின் தங்கள் வாழ்விடங்களுக்கு திரும்பிய தமிழர்கள் பலர் பயத்தின் காரணமாக குறைந்த விலைக்கு முஸ்லிம்களுக்குத் தங்கள் வீடு வளவுகளை விற்று விட்டு வேறு இடங்களுக்கு செல்லலாயினர். இவ்வாறு இடம்பெயர்ந்த சிலர் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனையை அண்டிய கறுவாக்கேணி எனும் இடத்தில் குடியேறி வாழத் தொடங்கினர். இக்கலவரம் நடந்த காலத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியும் அகில இலங்கைத் தமிழரசுக்கட்சியும் ஐ.தே.கவுடன் இணைந்து அமைச்சர் பதவிகளையும் பெற்றுக்கொண்டு அரசாங்கத்தில் ஆளும் கட்சியுடன் பங்காளராக இருந்த போதிலும் பாதிக்கப்பட்ட கல்முனை தமிழர்களுக்கு தகுந்த நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்க தவறியிருந்தார்கள். பாராளுமன்ற நலன்கள் சார்ந்த தங்கள் கட்சி அரசியலைக் கொண்டு செல்வதற்காக முஸ்லிம் அரசியல்வாதிகளின் முகம் கோணாமல் பார்த்துக் கொள்வதுதான் இன்றுபோல் அன்றும் தமிழரசுக்கட்சிக்கு தேவையாக இருந்தது. அவர்கள் செய்தது எல்லாம் கொழும்பிலிருந்து கல்முனைக்கு வந்து பாதிக்கப்பட்ட தமிழர்களிடம் தமிழ்– முஸ்லிம் ஒற்றுமையை ஏற்படுத்தி விட்டு சென்றது மட்டுமே. அம்பாறை மாவட்ட தமிழர்கள் எதிர்நோக்கிய எந்த அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் தமிழரசுக்கட்சி தீர்வை பெற்றுக்கொடுத்ததாக சரித்திரமே இல்லை.
சுமார் 250 வருடங்களுக்கு முன்பே தமிழர்கள் கல்முனையில் நூறு வீதமாக இருந்தது மட்டுமல்ல கல்முனைக்குடி, சாய்ந்தமருது ஆகிய இடங்களிலும் முஸ்லிம்களிடையே பரந்து வாழ்ந்தனர். 1960 இல் சாய்ந்தமருது (கரவாகு தெற்கு) கிராம சபைத் தேர்தலொன்றை அடுத்தும் பின்னர் 1967இல் ஏற்பட்ட கல்முனை கலவரங்களை அடுத்தும் கல்முனை குடியிலும் சாய்ந்தமருதிலும் வாழ்ந்த தமிழ்க் குடும்பங்கள் அனைத்தும் இப்பகுதிகளிலிருந்து முற்றாக இடம்பெயர்ந்தனர்.
(தொடரும்)
இப்பகுதியில் இன்றும் காணப்படும் இந்து ஆலயங்களின் இடிபாடுகள் இதற்கு சான்றாகும். இன்று பிரபல கல்லூரியாக விளங்கும் பதியூதின் மஃமூத் மகளிர் கல்லூரி அமைந்துள்ள இடத்தில் முன்பு அரசாங்க தமிழ் கலவன் பாடசாலையொன்று அமைந்திருந்தது. அதற்கு அண்மித்ததாக தற்போதைய ஸாகிரா கல்லூரிக்கு செல்லும் வழியில் விஷ்ணு கோயில் ஒன்றும் அக்கோயிலுக்குரிய சாலையும் அமைந்திருந்தன. இன்று இவையெல்லாம் முஸ்லிம் மயமாகி விட்டன.
உறவில் விரிசல் ஏற்படவும் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கல்முனைப்பட்டின சபையின் ஒரு தலைப்பட்சமான உருவாக்கமும் அப்பட்டின சபை மேற்கொண்ட தமிழர் விரோத நடவடிக்கைகளுமே காரணங்களாகும்.
இந்தப் பின்னணியிலேதான் தரவைப் பிள்ளையார் கோயில் வீதியைப் பிரிக்கும் எல்லையாகக் கொண்டு கல்முனைப் பட்டின சபையை இரண்டாகப் பிரித்து தென்பகுதியை முஸ்லிம் பெரும்பான்மைப் பட்டின சபையாகவும் வடபகுதியைத் தமிழ்ப் பெரும்பான்மைப் பட்டின சபையாகவும் உருவாக்குமாறு கல்முனைத் தமிழர்கள் 1960 களிலிருந்தே கோரிக்கை விடத் தொடங்கியிருந்தனர்.
1967 இல் கல்முனையில் நிகழ்ந்த கலவரத்தின் பின்னர் கல்முனைத் தமிழர்களின் சார்பில் காலஞ் சென்ற தோ. அந்தோனிப்பிள்ளை (அந்தோனிப்பிள்ளை மாஸ்ரர்) தலைமையிலான கல்முனை முன்னேற்றச் சங்கம் (14.04.1967 திகதியிட்டு அப்போதைய ஸ்தலஸ்தாபன அமைச்சர் தமிழரசுக்கட்சியின் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடனான கூட்டரசாங்கத்தில் அமைச்சராக இணைந்திருந்த அமரர் மு. திருச்செல்வம் அவர்களிடம் மேற்கூறப்பட்டவாறு கல்முனைப் பட்டின சபையை இரண்டாகப் பிரித்துத் தமிழர்களின் எதிர்கால இருப்புக்கு உதவுமாறு கடிதத்தின் மூலம் கோரிக்கை விடுத்தனர். அப்போதைய அரசியல் சூழ்நிலையில் ஒரு வர்த்தகமானி அறிவித்தல் மூலம் அமைச்சர் திருச்செல்வம் அவர்கள் இதனைச் சாத்தியமாக்கியிருக்கலாம். அன்று அவர் அவ்வாறு தமிழர்களின் நியாயமான கோரிக்கையை தற்றுணிவுட ன் நிறைவேற்றியிருந்தார். கல்முனைத் தமிழர்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள அவலமுடன் துர்ப்பாக்கிய நிலையும் ஏற்பட்டிருக்கமாட்டாது. வழமை போல் பாராளுமன்ற நலன்கள் சார்ந்த தங்கள் கட்சி அரசியலைக் கொண்டு செல்வதற்காகவும் கல்முனைத் தொகுதியிலே வழமையாகத் தமிழரசுக் கட்சி நிறுத்துகின்ற முஸ்லிம் வேட்பாளரை வெல்லப் பண்ணுவதற்காகவும் பாராளுமன்றத்தில் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வதற்காகவும் முன்னுரிமை அளிக்கப்பட்டு தமிழர்களின் இந்நியாயமான கோரிக்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த அமைச்சரினாலேயே புறந்தள்ளப்பட்டது. அதிகாரத்திலிருந்த போது கூட கல்முனைத் தமிழர்களின் இந்நியாயமான கோரிக்கை மீது தமிழரசுக் கட்சி அக்கறையற்றிருந்தமை கிழக்கு மாகாணத் தமிழர்கள் மீது குறிப்பாக அம்பாறை மாவட்டத் தமிழர்கள் மீது அக்கட்சிக்கு ஆத்மாத்தமான நேசிப்பு இல்லையென்பதன் வெளிப்பாடேயாகும். 1968 இல் கல்முனைத் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் அத்தொகுதியில் தமிழரசுக் கட்சி நிறுத்திய முஸ்லிம் வேட்பாளர் மெளசூர் மெளலானாவை ஆதரித்து அப்போது தமிழரசுக் கட்சியும் இணைந்திருந்த யூ.என்.பி. அரசாங்கத்தின் பிரதமர் டட்லி சேனாநாயக்க உட்பட அரசாங்கத்தின் அமைச்சர் பட்டாளமே வந்து தமிழரசுக் கட்சி வேட்பாளரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தும் கூட தமிழரசுக் கட்சி வேட்பாளரான மெளசூர் மெளலானாவினால் வெற்றி பெற முடியவில்லை.
இத்தேர்தலில் கல்முனைத் தொகுதி இடைத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எம்.சி.அகமது அவர்களே வெற்றியீட்டினார். எந்தத் தேர்தல் வெற்றியை எதிர்பார்த்து கல்முனைத் தமிழர்களின் நியாயமான கோரிக்கையைத் தமிழரசுக் கட்சி புறந்தள்ளியதோ அந்த வெற்றி கல்முனைத் தொகுதியிலே தமிழரசுக் கட்சிக்கு எட்டாக்கனியாகியது.
1970 க்குப் பின் கல்முனை நகரை அண்டியதாய் அமைந்திருந்த சிறிய நீர்ப்பாசனக் குளங்களில் படுக்கைகள் (Tank Beds) அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி முஸ்லிம் வர்த்தகர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கப்பட்டு அவை மண் நிரப்பப்பட்டுக் கடைத் தொகுதிகள் நிர்மாணிக்கப்பட்டன. நீர்ப்பாசனத் தேவைக்காகவும் மழைக்காலத்தில் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தவும் பயன்பட்ட இச் சிறிய நீர்பாசனக் குளங்கள் நீர்பாசனத் திணைக்கள அதிகாரிகளின் எதிர்ப்பையும் மீறி முஸ்லிம் வர்த்தகர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. கல்முனை நகரை முழுமையாக முஸ்லிம் மயப்படுத்தும் நோக்கமே இது. அரசியல் செல்வாக்கும் பொருளாதார பலமும் அற்றிருந்த கல்முனைத் தமிழர்களால் இதனைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. இந்த விடயத்தில் தமிழரசுக்கட்சி வழமை போல் வாளாவிருந்தது.
1977 – 1989 காலப்பகுதியில் ஜனாப் ஏ.ஆர்.மன்சூர் கல்முனைத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். இக்காலத்தில் கல்முனை 1ம் குறிச்சியில் வாடிவீடு கிறவல்குழி மற்றும் சவக்காலையை அண்டிய பகுதிகள் உள்ளடங்கிய பிரதேசத்தில் முஸ்லிம் குடும்பங்கள் குடியேற்றப்பட்டு இக்குடியேற்றப்பகுதிக்கு இஸ்லாமாபாத் எனவும் பெயரிடப்பட்டது. அதே போன்று கல்முனை நகரில் கத்தோலிக்க தேவாலயத்திற்குப் பின்னால் தேவாலயத்திற்குச் சொந்தமான பள்ளபூமி (இப்பூமியில் முன்பு இல்லச் சிறுவர்களுக்கான உணவுத் தேவைக்காக வேளாண்மை செய்கை பண்ணப்பட்டு வந்தது.) சுவீகரிக்கப்பட்டு இ.போ.ச. அலுவலகம் மற்றும் மடுவம் அரச அலுவலகங்கள் அமைக்கப்பட்டதுடன் கல்முனை – மணல்சேனை வீதியையும் கல்முனை- மட்டக்களப்பு பிரதான வீதியையும் இணைக்கும் வகையில் இப்பள்ளப்பூமிக்கூடாக பாதையொன்று நிர்மாணிக்கப்பட்டு அதற்கு ஹிஜ்ரா வீதி எனப் பெயரிடப்பட்டது. இவ்வாறு நன்கு திட்டமிட்டு அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி முஸ்லிம் மயப்படுத்தப்பட்ட கல்முனைதான் இன்று முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்களை அதிகளவில் கொண்டு விளங்குகிறது.
பிரதேச சபைகள் அமுலுக்கு வருமுன்னர் முழுக்கல்முனைத் தேர்தல் தொகுதியும் கரவாகு தெற்கு கிராம சபை (சாய்ந்தமருது) கல்முனைப் பட்டின சபை கரவாகு வடமேற்குக் கிராம சபை (சேனைக்குடியிருப்பு) கரவாகு வடக்குக் கிராமசபை (பெரியநீலாவணை) ஆகிய உள்ளூராட்சி அலகுகளை உள்ளடக்கியிருந்தது. 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் பிரகாரம் பட்டின சபைகளும் கிராம சபைகளும் இல்லாதொழிக்கப்பட்டு பதிலாக பிரதேச சபைகள் அறிமுகம் செய்யப்பட்ட போது முழுக்கல்முனைத் தொகுதியும் அடங்கிய நிலப்பரப்பு கரவாகுப்பற்றுப் பிரதேச சபை (கல்முனை) எனும் பெயரில் தனியானதொரு உள்ளூராட்சி அலகாக ஆக்கப்பட்டது. இத்தனியான பிரதேச சபை அமைக்கப்பட்ட பின்னரும் கூட கரவாகுப்பற்று (கல்முனை) பிரதேச சபையை தரவைப் பிள்ளையார் கோயில் வீதியை பிரிக்கும் எல்லையாகக் கொண்டு இரண்டாக பிரித்து இவ்வெல்லைக் கோட்டிலிருந்து தெற்கே காரைதீவுப் பிரதேச எல்லை வரை கல்முனைக்குடி மற்றும் சாய்ந்தமருது ஆகிய ஊர்களை உள்ளடக்கிய தென்பகுதியை கரவாகு தெற்கு எனும் பெயரில் முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேச சபையாகவும் இவ்வெல்லைக்கோட்டிலிருந்து வடக்கே மட்டக்களப்பு மாவட்ட எல்லை வரை கல்முனை, மணல்சேனை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, கிட்டங்கி, பாண்டிருப்பு, மருதமுனை மற்றும் பெரிய நீலாவணை ஆகிய ஊர்களை உள்ளடக்கிய வடபகுதியை கரவாகுப் பற்று வடக்கு எனும் பெயரில் தமிழ் பெரும்பான்மைப் பிரதேச சபையாகவும் உருவாக்கித் தரும்படி கல்முனை தமிழர்கள் பல பொது அமைப்புக்களினூடாக அரசை வற்புறுத்தி வந்துள்ளனர்.
1988 இலிருந்து அம்பாறை மாவட்டத் தமிழர் மகா சங்கம் இது விடயமாக முனைப்புடன் செயற்பட்டது.
இதேபோன்றுதான் பழைய நிர்வாக அலகான பிரிவுக்காரியாதிகாரி முறை (D.R.O’s Divisions) நீக்கப்பட்டு பதிலாக உதவி அரசாங்க அதிபர் பிரிவு (A.G.A.’s Divisions) நிர்வாக அலகுகளாக அறிமுகம் செய்யப்பட்ட போது முழுக் கல்முனைத் தேர்தல் தொகுதியும் அடங்கிய நிலப்பரப்பு கல்முனை உதவி அரசாங்க அதிபர் பிரிவு எனும் பெயரில் தனியானதொரு நிர்வாக அலகாக ஆக்கப்பட்டது. தற்போது பிரதேச செயலகப் பிரிவு எனப் பெயர் மாற்றம் பெற்றுள்ளது. முழுக்கல்முனைத் தேர்தல் தொகுதியையும் உள்ளடக்கிய இத்தனியான நிர்வாக அலகினையும் கல்முனைத் தரவைப்பிள்ளையார் கோயில் வீதியைப் பிரிக்கும் எல்லையாக கொண்டு இரண்டாக பிரித்து தென்பகுதியை நூறு வீத முஸ்லிம்களைக் கொண்டதாகவும் வடபகுதியை தமிழர்களை பெரும்பான்மையாகவும் அத்துடன் தமிழர் முஸ்லிம் சிங்களவர் ஆகிய மூவின மக்களைக் கொண்டதாகவும் இரு வெவ்வேறு தனித்தனி நிருவாக அலகுகளைக் கொண்டதாக ஆக்கி தரும்படியும் சமகாலத்தில் கல்முனைத் தமிழர்கள் கோரிக்கை விட்டு வந்தனர். ஏனெனில் தனியான நிர்வாக அலகொன்று ஏற்படுத்தப்பட்டால்தான் அத்தனியான நிர்வாக அலகின் எல்லைகளை அடிப்படையாக வைத்துத் தனியான உள்ளூராட்சி அலகொன்றினையும் கல்முனை தமிழர்கள் தங்களுக்கென்று பெற்றுக்கொள்ள முடியும். இந்த விடயத்திலும் அம்பாறை மாவட்ட தமிழர் மகா சங்கம் 1988 இலிருந்தே முனைப்போடு செயற்பட்டது. இதன் பலனாகக் கல்முனை தமிழ் பிரிவுக்கெனத் தனியான உதவி அரசாங்க அதிபர் பிரிவு (உப) அலுவலகமொன்று ????????? திறக்கப்பட்டு அதன் பின்னர் 28.07.1993 அமைச்சரவைத் தீர்மானத்தின்படி இப்பிரிவு பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தப்பட்டும் கூட இக்கல்முனைத் தமிழ் பிரதேச செயலகப் பிரிவான கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவு முஸ்லிம் அரசியல்வாதிகளின் தலையீடுகள் காரணமாக இதுவரை முழுமையான பிரதேச செயலகமாக அதிகாரமளிக்கப்படாமல் எல்லைகள் வகுக்கப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்படாமல் அதிகாரமற்றதோர் உப பிரதேச செயலகப் பிரிவாக பெயரளவிலேயே கல்முனை தமிழர்களுக்கு கண்துடைப்பு நடவடிக்கையாகவே இயங்கி வருகின்றது. இத்தமிழர் பிரிவு தரமுயர்த்தப்படல் நிறைவடைந்தால்தான் கல்முனைத் தமிழர்கள் தங்களுக்கென்று தனியான தமிழ்ப்பெரும்பான்மை உள்ளூராட்சி அலகொன்றினைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த விடயத்தைத் தானும் கல்முனை தமிழர்களுக்கு நிறைவேற்றிக் கொடுக்க முடியாமல் அறுபது வருட காலத்திற்கும் மேற்பட்ட அரசியல் பாரம்பரியம் உடைய தமிழரசுக்கட்சி வெறுமனே அறிக்கைகள் மூலம் மட்டும் ஏட்டுச்சுரைக்காய் அரசியல் செய்து கொண்டிருக்கின்றது.
முழுக்கல்முனைத் தேர்தல் தொகுதிகளையும் உள்ளடக்கியதாக 1987 இல் உருவாக்கப்பட்ட கரவாகுப்பற்று கல்முனை பிரதேச சபையானது பின்னர் கல்முனை தமிழர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் அமைச்சர் எம்.எச்.எம்.அஸ்ரப் காலத்தில் இன்னொரு முஸ்லிம் அமைச்சரான அலவி மௌலானா அவர்கள் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சராகவிருந்த அரசியல் அதிகாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி 1988.12.11 திகதியிட்ட 1057/16 இலக்கமுடைய அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் 11.06.1999 இலிருந்து அமுலுக்கு வருமாறு கல்முனை நகர சபை??????????????????????????? இது பின்னர் மிக குறுகிய காலத்தில் மீண்டும் 11.06.2001 திகதிய 1188/1ம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் 15.04.2002 தொடக்கம் கல்முனை மாநகர சபையாகத் தரமுயர்த்தப்பட்டது. இத்தகைய எல்லாக் கட்டங்களின் போதும் கல்முனைத் தமிழர்களின் தனியான உள்ளூராட்சி அலகு கோரிக்கையும் கல்முனைத் தமிழ் பிரிவை (உப பிரதேச செயலக பிரிவு) தரமுயர்த்தும் கோரிக்கையும் கிடப்பிலே போடப்பட்ட சமகாலத்தில் சாய்ந்தமருதுக்கென தனியான பிரதேச செயலகப்பிரிவு (நிர்வாக அலகு) ஏற்படுத்தப்பட்டது. இதனை அடிப்படையாக வைத்தே இப்போது சாய்ந்தமருதுக்கென தனியான உள்ளூராட்சி அலகொன்றினை ஏற்படுத்தும் முயற்சியை முஸ்லிம் அரசியல்வாதிகள் முன்னெடுத்துள்ளனர். இதற்கான பிள்ளையார் சுழி அமைச்சர் அதாவுல்லா அவர்கள் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சராக இருந்த போது இடப்பட்டது. தற்போதைய அரசாங்கத்தில் முஸ்லிம் அமைச்சரான பைசர் முஸ்தபா அவர்கள் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சராக இருக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சாய்ந்த மருதுக்கென தனியான உள்ளூராட்சி அலகொன்றினை ஏற்படுத்தும் முயற்சியினை முஸ்லிம் அரசியல்வாதிகள் மீள ஆரம்பித்துள்ளனர்.
தற்போது அமுலிலுள்ள கல்முனை மாநகர சபையானது சாய்ந்தமருது பிரதேச செயலகப்பிரிவு கல்முனை (முஸ்லிம்) பிரதேச செயலக பிரிவு மற்றும் இன்னும் தரமுயர்த்தப்படாத கல்முனை தமிழ் உப பிரதேச செயலக பிரிவு ஆகிய நிருவாக அலகுகளை உள்ளடக்கி உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் கல்முனை தமிழ் (உப) பிரதேச செயலகப்பிரிவு தரமுயர்த்தப்பட்டு அதன் அடிப்படையில் தனியான தமிழ்ப்பெரும்பான்மை உள்ளூராட்சி அலகொன்று (பிரதேச சபை) ஏற்படுத்தப்படாமல் சாய்ந்தமருதுக்கென தனியான உள்ளூராட்சி அலகொன்று ஏற்படுத்தப்படுமாயின் எதிர்காலத்தில் கல்முனை தமிழர்களுக்கான தனியான உள்ளூராட்சி அலகு கோரிக்கை அடிபட்டு போகக்கூடிய ஆபத்து உண்டு. மட்டுமல்லாமல் கல்முனை தமிழ் (உப) பிரதேச செயலகப் பிரிவு எல்லைகள் வகுக்கப்பட்டு முழுமையான அதிகாரமுள்ள அதாவது ஏனைய பிரதேச செயலகங்களைப் போன்று அதிகாரமுள்ள தனியான தமிழ்ப்பெரும்பான்மை உள்ளூராட்சி அலகும் ஏற்படுத்தப்படாமல் கல்முனை தமிழர்களின் எதிர்ப்பை புறக்கணித்து உத்தேச கல்முனை நகர அபிவிருத்தித் திட்டமும் முன்னெடுக்கப்படுமாயின் கல்முனை தமிழர்களின் எதிர்கால இருப்பு கேள்விக்குறியாக்கப்படும். இந்த ஆபத்தைத்தடுத்து நிறுத்தி கல்முனைத்தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளான கல்முனை தமிழ் (உப) பிரிவைத் தரமுயர்த்துதல் மற்றும் கல்முனைத் தமிழர்களுக்கெனத் தனியான உள்ளூராட்சி அலகை ஏற்படுத்துதல் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொடுக்க தனியே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளும் கட்சியாக விளங்கும் தமிழரசுக்கட்சியால் இயலாது என்பதை அண்மையில் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் கல்முனையின் எல்லைகள் பறிபோன பின்பும் தமிழ் நாட்டு அரசியல் பாணியில் எல்லைக்காவலன் என அழைக்கப்படுபவருமான அண்ணன் ஏகாம்பரம் ஏற்றுக்கொள்வாரென்று நம்புகின்றேன்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரை ??????? மையப்படுத்தித் தமிழ் மக்களின் வாக்குகளை சேகரிக்கின்ற தந்திரோபாயங்களுடன் அரசியலை உப்பரிகையில் நின்று கொண்டு நோக்குகின்றார்களேயொழிய அடிமட்டத்தில் கிராம மட்டத்தில் களநிலைமைகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு உகந்த அணுகு முறைகளையும் வியூகங்களையும் வகுத்துத் தமிழ் மக்களின் சமூக பொருளாதார அரசியல் இருப்பைத் தக்க வைத்துப் பேணி பாதுகாத்து வலுப்படுத்தும் சிந்தனையோ நிகழ்ச்சி நிரலோ அதற்கான பொறி முறையோ தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் இல்லை. இந்த பின்னணியில் கல்முனைத் தமிழர்களின் கோரிக்கைகளையும் தேவைகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிறைவேற்றித்தரும் என்ற நம்பிக்கையும் இல்லை.
இந்த சூழ்நிலையில் கல்முனை தமிழர்கள் செய்ய வேண்டியதென்ன?
கல்முனை தமிழ் சிவில் சமூகம் கட்சி அரசியலுக்கு அப்பால் அம்பாறை மாவட்டத்தில் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த முன்னாள் மற்றும் இந்நாள் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற பொதுத்தேர்தல்களின் போது அனைத்துக் கட்சிகளிலும் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்கள் முன்னாள் மற்றும் இந்நாள் தமிழ் மாகாண சபை உறுப்பினர்கள் மாகாண சபை தேர்தல்களின் போது அனைத்து கட்சிகளிலும் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்கள் அம்பாறை மாவட்டத்தின் சகல உள்ளூராட்சி சபைகளினதும் முன்னாள் மற்றும் இந்நாள் தமிழ் உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றத்தலைவர்கள் உட்பட அம்பாறை மாவட்ட தமிழர்களிடையே உள்ள அரசியல் சாராத கல்விமான்கள் துறைசார் நிபுணர்கள் ஊடகவியலாளர்கள் ஆர்வலர்கள் நலன்விரும்பிகள் ஆகியோர் உள்ளடங்கிய பொறிமுறை ஒன்றை ஏற்படுத்தி அரசாங்கத்துடன் செல்வாக்குமிக்கவர்களை அணுகி அவர்களினூடாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் மட்டத்திற்கு கல்முனை தமிழர்களின் இந்த நீண்ட காலக் கோரிக்கையின் நியாயத்தை எடுத்து செல்வதற்கான நடவடிக்கையினை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும். அழுதும் பிள்ளை அவளே பெற வேண்டும்.