காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவுடன் பேசப்பட்ட விடயங்கள் குறித்து, ஊடகங்களிடம் கருத்து வெளியிட வேண்டாம்!

UN_CIஇலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவுடன் பேசப்பட்ட விடயங்கள் குறித்து, ஊடகங்களிடம் கருத்து வெளியிட வேண்டாம் என்று, காணாமற்போகச் செய்யப்பட்டோரின் உறவினர்களிடம் ஐ.நா கேட்டுக் கொண்டுள்ளது.பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவின் அதிகாரிகள், நேற்று மாலை காணாமற்போகச் செய்யப்பட்டோரின் உறவினர்களுடன் கொழும்பில் உள்ள ஐ.நா பணியகத்தில் கலந்துரையாடியிருந்தனர்.இந்தச் சந்திப்பில், காணாமற்போகச் செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவும் கலந்து கொண்டிந்தார். இந்தச் சந்திப்புத் தொடர்பாக அவரிடம் வினவப்பட்ட போதே, சந்திப்புத் தொடர்பான கருத்துகள் எதையும் தெரிவிக்க மறுத்துள்ள அவர், சந்திப்புத் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவினர், அடுத்த வாரம் ஊடகச் சந்திப்பு ஒன்றை நடத்துவார்கள் என்றும் ஐ.நா அதிகாரிகள் தம்மிடம் கூறிய அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 18ஆம் நாள் வரை இலங்கையில் தங்கியிருக்கவுள்ள, பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவினர், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, மாத்தளை, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கும் சென்று காணாமற்போகச் செய்யப்பட்டோரின் உறவினர்களைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.இதேவேளை ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலணி குழுவொன்று சிறீலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர விஜேகுணவர்தனவை கொழும்பில் உள்ள கடற்படை தலைமையகத்தில் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. பலவந்தமாகவோ, விருப்பமின்றியோ காணாமல் போகச் செய்யும் விவகாரங்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலணிக்குழுவின் உப தலைவர் பேர்னாட் துஹாமி உள்ளிட்ட குழுவினரே கடற்படைத் தளபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.இலங்கையின் காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் இதன் போது கலந்துரையாடியதாக கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.