வவுனியாவில் இருவருக்கு மரண தண்டனை- நீதிமன்றத்தில் பதற்றம்

Vavuniya-Courtகடந்த 2006 ஆம் ஆண்டு மே மாதம் செட்டிகுளம் 2 ஆம் வட்டாரத்தில் நவரத்தினராசா நவரஞ்சன் என்பவரின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட இருவருக்கு வவுனியா நீதி மன்றத்தினால் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரினால் குற்றஞ்சாட்டப்பட்ட 6 பேரில் கனகலிங்கம் செல்வரத்தினம் மற்றும் அழகன் சசிதரன் ஆகிய இருவருக்கே இன்று வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கரினால் மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதே வேளை குறித்த குற்றச்செயல்களை செய்வதற்காக சட்டவிரோதமாக கூட்டம் கூடியதாக சாட்டப்பட்ட குற்றச்சாட்டுக்கு குற்றவாளிகளாக காணப்பட்ட செட்டிகுளம் 2 ஆம் வட்டாரத்தை சேர்ந்த கனகலிங்கம் செல்வரத்தினம், அழகன் சசிதரன், தில்லையம்பலம் ஜெயராசா, தில்லையம்பலம் குலேந்திரராசா, தியாகராசா குமார், அந்தோனிப்பிள்ளை சுபாஸ்கரன் ஆகியோருக்கு தலா 5 மாத கடூழிய சிறைத்தண்டனையும் 5 ஆயிரம் ரூபா தண்டமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மேலும் நவரத்தினராசா மனோராஜ் என்பவருக்கு கடும் காயம் விளைவித்த குற்றச்சாட்டுக்கு குறித்த 6 பேருக்கும் 5 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 10 ஆயிரம் ரூபா தண்டமும் விதிக்கப்பட்டது.
இதேவேளை குறித்த தீர்ப்பு அறிவிக்கப்பட்ட வேளையில் திறந்த நீதிமன்றில் இருந்து அழகன் சசிதரனின் பெரிய தாயாரான செல்வராசா பரமேஸ்வரி நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் சத்தமிட்டு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டமைக்காக மன்றினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டார்.
குறித்த பெண்மணியின் பெறாமகனான அழகன் சசிதரன் ஏற்கனவே வவுனியா மேல் நீதிமன்றத்தால் வேறு ஒரு கொலை குற்றச்சாட்டு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மரணதண்டனை வழங்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீதிமன்றத்திற்கு முன்பாக கூடி நின்று குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில்கோசங்களை எழுப்பி குழப்பம் விளைவித்ததால் பொலிஸார் வரவழைக்கப்பட்டு அவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருந்தனர்

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.