தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியற் பீடத்தில் தொடரும் பிரச்சினைகள்.

1622027_442435609222822_694582511_nஅபிவிருத்தி அடைந்துவருகின்ற நாட்டினிலே பொறியியலானது மிகமுக்கியமான துறையாகும். இலங்கையில் பொறியியற் பீடங்களைக் கொண்டுள்ள அரச பல்கலைக்கழங்களால் வருடம்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தகைமைவாய்ந்த பொறியியலாளர்கள் உருவாக்கப்பட்டு வருகின்றார்கள். இப் பொறியியலாளர்களின் பங்களிப்பானது இந்நாட்டின் அபிவிருத்தியில் மிகமுக்கியமான இடத்தை வகிக்கின்றது. இலங்கையில் இவ் அரச பல்கலைக்கழகங்களினால் உருவாக்கப்படும் பொறியியலாளர்களின் துறைசார் திறன்களானது உலகளவில் மிகவும் மதிப்புமிக்கதாகும். எனவே இலவசக்கல்வியின் எதிர்பார்ப்பினை பூரணப்படுத்துவதற்தாக இப் பொறியியற் பீடங்கள் அர்ப்பணிப்புடன் செயற்ப்பட்டு வந்துள்ளன. குறிப்பாக இப்பீடங்கள் தலைசிறந்த மாணவர்களுக்கு இவர்களின் இனம், மொழி, மதம் பாராது தலைசிறந்த கல்வியினை வழங்கிவந்துள்ளமை தெளிவாகத்தெரிகின்றது.

இன்று எமது பொறியியற் பீடங்களின் பெருமைக்குரிய வரலாறானது அச்சுறுத்தலை எதிர்நோக்கி வருகின்றது. குறிப்பாக அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட ஒலுவிலில் அமைந்துள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியற் பீடமானது மிக மோசமான நிலைமையில் காணப்படுகின்றமையானது எதிர்கால பொறியியற் கல்வியின் தரத்தின் மீது பயத்தினையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றது. இப்பல்கலைக்கழக பொறியியற் பீடத்தில் இதுவரை முந்நூறு வரையிலான மாணவர்கள் மூன்று கல்வியாண்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் இப் பொறியியற் பீட மாணவர்களான நாங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றோம். குறிப்பாக தரங்குறைந்த கல்வி, திறன்மிக்க விரிவுரையாளர்களுக்கான பற்றாக்குறை அடிப்படைப் பௌதீக வளங்கள் கூட காணப்படாமை, ஏனைய பொறியியற் பீடங்கள் மற்றும் ஏனைய பொறியியல் சார் தொழிற்சாலைகளுடனான தொடர்பின்மை, மேலதிக துறைசார் கற்கைநெறிகளை தொடர்வதற்கும் மற்றும் துறைசார் செயற்பாடுகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்புகளின்மை, தேவையற்ற நீண்டகால விடுமுறைகள் போன்ற பல சீர்செய்ய முடியாத குறைபாடுகள் காணப்படுகின்றமையானது மாணவர்களாகிய எம்மை பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது.

ஒரு கல்வி நிறுவனமானது மாணவர்களுக்காகவே அன்றி மாணவர்கள் கல்வி நிறுவனங்களுக்காக உள்ளார்கள் என்ற எண்ணத்தோடு செயற்படுவதென்பது தவறான ஒன்றாகும். அரச கல்வி நிறுவனமோ அல்லது தனியார் கல்வி நிறுவனமோ தம் மாணவர்களுக்கு அதியுயர் தரத்திலான கல்வியினை வழங்குவதே அந்நிறுவனத்தின் தலையாய பணியாகும். இதைச் செய்யாத போது அக் கல்வி நிறுவனம் ஏன் இயங்குகின்றது என்ற கேள்வி தானாகவே எழுகின்றது.

தீவிரமானதும் முறைசார்ந்ததுமான பிரச்சனைகள்

முதலாவதாக, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலுள்ள இப் பொறியியற்பீடமானது எவ்வித முறையான ஆய்வுகளும் இன்றி குறிப்பிட்ட சில காரணங்களுக்காக குறுகிய காலத்தில் அவசர அவசரமாக ஆரம்பிக்கப்பட்டமை பெரும் குறைபாடாகும். 2011 ஆம் ஆண்டு உயர்தர பெறுபேறுகளில் ஏற்பட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான தீர்வாக மேலதிமாக 5609 மாணவர்களிற்கு பல்கலைக்கழகத்திற்கான அனுமதியினை வழங்குமாறு உயர் நீதிமன்றத்தினால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவிடப்பட்டது. இம்மேலதிக உள்வாங்குதல்களை ஈடுசெய்வதற்காக அரசாங்கம் அவசர அவசரமாக புதியதொரு பொறியியற் பீடமொன்றை ஆரம்பித்தது. உச்ச நீதிமன்ற ஆணை 2012 செப்டம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2013 மார்ச் மாதம் பொறியிற் பீடத்திற்கு மாணவர்கள் பதிவு செய்யப்பட்டனர். இதிலிருந்து இந்தப் பீடத்தினை ஆரம்பிப்பதற்கான செயன்முறை வெறுமனே ஏழு மாதங்களே நீடித்தது என்பது தெளிவாகின்றது. முதற் தொகுதி மாணவர்கள் பதிவுசெய்யப்பட்ட பின்னரே இப் பொறியியற் பீடத்தில் பீடாதிபதி உள்ளடங்கலாக முதற்தொகுதி விரிவுரையாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இது இலங்கை பல்கலைக் கழக வரலாற்றில் வேறெங்கும் நடந்திராததொரு நிகழ்வாகும்.

எந்தவோர் பீடத்தை உருவாக்குவதற்கும் நீண்ட திட்டமிடலும், கரிசனையுடன் கூடிய செயலாக்கமும் அவசியம். குறிப்பாக ஆய்வு கூடப் பரிசோதனைகள், கைத்தொழிற் துறை சார் செயற்பாடுகள், நுண் அறிவு சார் கல்வியுடன் கூடிய பொறியியற் கல்வியை வழங்கும் பீடமொன்றுக்கு திட்டமிடலும், செயலாக்கமும் அத்தியாவசியமானவை. இதைச் செய்யாமல், அதிகாரத்தில் இருப்பவர்கள் ஒரு பிழையை இன்னுமோர் அவசர நடவடிக்கையால் திருத்த முற்படும் போது அது நெருக்கடிகளையும் குழப்பத்தையும் மாத்திரமே உருவாக்கும்.

இரண்டாவதாக, இப் பீடம் அமைந்திருக்கும் ஒலுவில் பிரதேசமானது பொறியியற் பீடத்திற்கு சற்றும் பொருத்தமற்றது. இது இலங்கையின் முக்கிய நகரங்களிலிருந்து முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன், பொறியியல் சார் தொழில் எதுவுமற்றதாகும். இதன் விளைவாக, பொறியியற் துறையுடன் எதுவித தொடர்புகளுமற்ற நிலையும் மாணவர்களுக்கு நேர்ந்துள்ளது. மேலும், நாட்டின் பொறியியற் துறை சார் நடவடிக்கைகள் எதிலும் பங்குபற்ற முடியாத நிலையும் மாணவர் எமக்கு ஏற்பட்டிருக்கின்றது. பிரதேசத்தின் பொருளாதார ஆதாரங்களாக மீன்பிடியும், விவசாயமும் மட்டும் இருக்கும் இடத்தில் பொறியியற் பீடமொன்றை நிறுவுவது பொது அறிவிற்கு முரணானது.

மேலும், இம் மோசமான அமைவிடம் விரிவுரையாளர்கள் பீடத்தில் இணைவதற்குத் தடையாக அமைந்திருப்பதும் குறிப்பிடப்பட வேண்டியததொன்றாகும். இது இதுவரை நிரப்பப்படாமலிருக்கும் விரிவுரையாளர் வெற்றிடங்களிருந்தும், பீடத்தின் விரிவுரையாளர்கள் சேர்ப்பு விளம்பரங்களுக்குக் கிடைக்கும் மிகச் சொற்பமான பதில்களிலிருந்தும் தெளிவாகின்றது. பேராதனை, மொறட்டுவை, மற்றும் உருகுணை முதலிய ஏனைய பொறியியற் பீடங்களிலிருந்து வெகு தொலைவிலிருப்பதால் இப் பீடங்களிருந்து வருகை விரிவுரையாளர்களைக் இணைத்துக் கொள்வது கூட கடிமானதொன்றாகவே இருக்கின்றது. இவை அனைத்திற்கும் மேலாக, பல்கலைக்கழகம் அடிக்கடி வெள்ளத்தில் மூழ்குவதுடன் பல வாரங்களாக மூடப்படுவதும் நடந்து வருகின்றது.

மூன்றாவதாக, இப் பல்கலைக்கழகம் பொறியியற் பீடமொன்றிற்கு உகந்ததல்ல. பல்கலைக்கழகத் தர வரிசைப் பட்டியலில் தென் கிழக்குப் பல்கலைக்கழகமானது தொடர்ச்சியாக பின் தங்கிய நிலையில் இருப்பது நாம் அறிந்ததே. ஏனைய பீடங்களான கலைப் பீடம், முகாமைத்துவப் பீடம், பிரயோக விஞ்ஞானப் பீடம் என்பன நாட்டின் ஏனைய பீடங்களுடன் ஒப்பிடும் போது குறைந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தி வருவது மறுக்கப்பட முடியாததொன்றாகும். மேலும், பல்கலைக்கழக நிர்வாகம் பரீட்சை முடிவுகள் மற்றும் ஆய்வு கூட உபகரணங்கள், உசாத்துணை நூல்கள், மற்றும் பாடப் புத்தகங்கள் என்பவற்றை உரிய நேரத்தில் தருவிக்கத் தவறியதால் மாணவர்களது கல்வி நடவடிக்கைகள் பின்தங்குவதில் நேரடிப் பொறுப்பாளிகளாக இருந்திருக்கின்றது.

நான்காவதாக, எமது பொறியியற் பீடத்தில் சிறந்த விரிவுரையாளர்கள் இல்லாத மோசமான நிலை தொடர்கின்றது. தற்போது வரையில் 11 விரிவுரையாளர்களே பொறியியற் பீடத்தில் பணியாற்றுகின்றனர். பீடாதிபதியைத் தவிர்த்து இருவர் மாத்திரமே கலாநிதிப் பட்டம் பெற்றவர்கள். விரிவுரையாளர்களில் பெரும்பான்மையானோர் இளமானிப் பட்டம் பெற்றவர்கள். மேலும், பலர் இப் பீடத்தில் இணையும் முன்னர் விரிவுரையாற்றிய அனுபவமில்லாதவர்கள். மாணவர்களால் இறுதி இரண்டு ஆண்டுகளாக நிரப்பப்பட்ட விரிவுரையாளர் பின்னூட்டல் படிவங்கள் பீடத்தின் சராசரி கற்பித்தற் தரம் மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பதை வெளிக்காட்டி நிற்கின்றன.

ஐந்தாவதாக, பொறியியற் பீடத்தின் நிர்வாகம் கல்வித் தரம் குன்றுவது தொடர்பில் அக்கறை காட்டாத நிலையே நீடிக்கின்றது. மாணவர்கள் குறித்த சில விரிவுரையாளர்கள் தொடர்பில் அதிருப்தியினை நியாயமான முறையில் வெளிக்காட்டியிருந்த போதும், இதே விரிவுரையாளர்கள் தொடர்ந்தும் பாடங்களைக் கற்பிக்க நியமிக்கப்படுகின்றனர். கணினி-சார் செயன்முறைகள் (Practicals) மோசமாக வடிவமைக்கப்படுகின்றன. முழுக் கல்விப் பருவத்திலும் (Full semester) கற்றுத் தேற வேண்டிய பாடங்களை நாம் ஒரு சில நாட்களிலேயே உள்வாங்க வேண்டிய துர்பாக்கியம் எமக்கு நேர்ந்திருக்கின்றது. குறித்ததோர் பாடத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட செயன்முறைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது எமது எதிர்காலம் குறித்த பயத்தினை மேலும் அதிகரித்துள்ளது.

ஆறாவதாக, இங்கு மாணவர்களுக்கு பல்கலை பொறியியற் கல்வியைத் தாண்டி எதையும் கற்க முடியா நிலை இருக்கின்றது. ஏன் இங்கு மாணவர்களால் ஆங்கில அறிவைக் கூட விருத்தி செய்ய முடியவில்லை. தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் காரணத்தால் பொறியியல் கண்காட்சிகள், போட்டிகள் என்பவற்றிற்கான அழைப்பிதழ்கள் கூட எமக்குக் கிடைப்பதில்லை. மென்-திறன்களும், ஆங்கிலத் தேர்ச்சியும் பொறியியலாளர்களிடம் எதிர்பார்க்கப்படுகின்ற காலப் பகுதியில் இவை மிகவும் தீவிரமான பிரச்சினைகளாகும்.

அரச பொறியியற் கல்வி எதிர்நோக்கும் பரந்துபட்ட சவால்கள்

இங்கு கல்வி கற்கும் மாணவர்களில் பலர் பொலநறுவை, அநுராதபுரம், மொனராகலை, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, நுவரேலியா போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இம் மாவட்டங்கள் பொருளாதாரரீதியில் பின்தங்கியவை. நகர் சார் பிரதேசங்களில் கற்கும் மாணவர்களிலும் பார்க்க பாரிய பாகுபாடுகளுடன் நாம் எமது உயர் தரக் கல்வியைத் தொடர்ந்து பொறியியற் பீடத்திற்கு தெரிவாகியுள்ளோம். ஆசியரின்மை, ஆய்வுகூட உபகரணமின்மை என்பன எமது வாழ்க்கையின் யதார்த்தங்கள். மாவட்ட கோட்டா முறைமையின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் திறமை வாய்ந்த மாணவர்களுக்கு சிறந்த உயர் கல்வி வாய்ப்பினை ஏற்படுத்துவது என்ற அடிப்படை நோக்கம் இது போன்ற மோசமான நிலையில் இருக்கும் பீடங்களுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் தொகை தொகையாய் அனுப்பப்படும் போது வீணடிக்கப்படுகின்றது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நாம் பேராதனையிலோ, உருகுணையிலோ இணைந்திருப்போம் என்றால் சிறந்த பொறியியற் கல்வி மாத்திரமல்ல எம்மால் மென்-திறன்கள் ஆங்கில அறிவு என்பவற்றையும் கூடவே பெற்றிருப்போம்.

இதற்கும் மேலாக, நாட்டில் SLIIT, ICBT, BCAS முதலிய தனியார் பொறியியற் கல்வி நிறுவனங்கள் பல அண்மைக் காலத்தில் உதித்திருக்கின்றன. இந்த நிறுவனங்களில் எத்தனை மாணவர்களை உள்வாங்கலாம் என்பதில் கட்டுப்பாடுகள் இல்லை. உயர்தர பரீட்சையில் சித்தி பெறாத மாணவர்கள் கூட இந்த நிறுவனங்களில் இணைந்து பொறியியளாளர்களாகப் பட்டம் பெறக் கூடிய நிலையே இன்றிருக்கின்றது. இந்த நிறுவனங்களில் படிப்பவர்கள் பொருளாதார-சமூக ரீதியில் உயர்ந்தவர்களாகவும், இந்த நிறுவனங்கள் கொழும்பை அண்டிய பிரதேசங்களிலிருப்பதால் பொறியியற் துறையுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டவர்களாகவும், ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருப்பர். நாம் தனியார் கல்வி நிலையங்கள் மூடப்பட வேண்டும் என்றோ, உயர்தரப் பரீட்சையோடு ஒருவரது வாழ்க்கை நிற்க வேண்டுமென்றோ கோரவில்லை. மாறாக, சமமான வசதி வாய்ப்புக்களை அரச பல்கலைக்கழகங்களில் பயிலும் எமக்கும் வழங்க வேண்டும் என்றே கோருகின்றோம். ஒரே மேடையில் அனைவரும் ஆட வேண்டும். தனியார் பொறியியற் கல்வி நிலையங்களை தீவிரமாக ஊக்குவித்துக் கொண்டு எம் போன்ற மாணவர்களுக்கு குறை-தரக் கல்வியை அரசு வழங்குவது எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகளை உருவாக்கும்.

எண்ணிக்கையிலும் பார்க்க தரமே முதன்மையானது. அரச பல்கலைக்கழகங்களில் பொறியியல் மாணவர்களின் தொகையை அதிகரிக்கும் நகர்வுகள் வரவேற்கப் பட வேண்டியவை. ஆனால் இதற்கான கிரயம் அரச பொறியியற் கல்வியின் தரக் குறைப்பாக இருக்க முடியாது. இருக்கும் அரச பொறியியற் பீடங்களின் மாணவர் கொள்ளளவு, உட்கட்டமைப்பு, விரிவுரையாளர் வளங்கள் என்பவற்றை அதிகரிப்பதே சரியான நகர்வாக அமையும். சரியான திட்டமிடல், தீர்மானங்களின்றி விரைந்து சீரற்ற, தரம் குறைவான பொறியியற் பீடங்களை உருவாக்குவது தீர்வாக இருக்காது.

இலங்கையில் இருக்கும் ஏனைய பொறியியற் பீடங்கள் அனைத்துமே இது வரை சிறந்த தரத்திலான பொறியியலாளர்களை உருவாக்கி வந்திருக்கின்றன. தரம் குறைவான பொறியிலாளர்களை அரச பொறியியற் பீடங்களில் ஒன்றாகிலும் உருவாக்குமானால் அது ஏனைய அரச பொறியியற் பீடங்களுக்கும் எதிர் மறையான பாதிப்பை உருவாக்கும்.

ஒலுவில் பொறியியற் பீடம்: நிலைமை முன்னேறுமா?

புதிய பீடமொன்று முன்னேறுமா, அல்லது நிலைமைகள் மோசமடையுமா என்பதற்கு இரண்டரை வருடங்கள் போதுமானது. முன்னேற்றமடைவதற்கான சாத்தியக் கூறூகள் இருப்பின் இந்தக் கால இடைவெளியில் முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் தோன்றி இருக்க வேண்டும்.

ஆனால், தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியற் பீடத்திலோ நிலைமைகள் காலத்துடன் மேலும் மோசமடைந்து செல்கிறது. உதாரணமாக, முதல் அணி (first batch) மாணவர்களின் முதலாவது கல்வி அரையாண்டு (Semester) மாத்திரமே விதந்துரைக்கப்பட்ட 15 கிழமைகளில் முடிக்கப்பட்டது. அதன் பின்னர் அனைத்து அணிகளது கல்வி அரையாண்டுகளும் கால தாமாதமாகியே பூர்த்தியாக்கப்பட்டு வருகின்றது. முதலாம் அணி மாணவர்களின் 4 ஆம் கல்வி அரையாண்டுப் (Semester) பரீட்சை முடிவுகள் 5 மாதங்கள் தாழ்த்தியே அறிவிக்கப்பட்டன. பீட விரிவுரையாளர்களால் கற்பிக்கப்படும் பாடங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைவடைந்து செல்கின்றது. மின் மற்றும் இலத்திரனியல் பொறியியற் திணைக்களத்தால் (Department of Electrical and Electronics Engineering) வழங்கப்படும் அத்தனை பாடங்களும், இயந்திரவியல் திணைக்களத்தால் (Department of Mechanical Engineering) வழங்கப்படும் பெரும்பான்மையான பாடங்களும் வருகை விரிவுரையாளர்களாலேயே (Visiting lecturers) கற்பிக்கப்படுகின்றன. வருகை விரிவுரைகள் வார இறுதி நாட்களில் நடப்பதால் கிழமை நாட்களில் மாணவர்களுக்கு செய்யவதற்கு ஒன்றுமிருப்பதில்லை. இரண்டாம் அணி (Second batch) இயந்திரவியல் மாணவர்களுக்கு கல்வி அரையாண்டின் 12 ஆம் கிழமை வரையில் முக்கியமான பாடமொன்று ஆரம்பிக்கப்படவேயில்லை. முழுக் கல்வி அரையாண்டும் கற்றுத் தேற வேண்டிய பாடங்கள் ஒரு சில நாட்களிலே பூர்த்தி செய்யப்படுகின்றன. விடுமுறை நாட்களும் காலத்துடன் நீள்கின்றது. ஆசிரியர் வளமும் வளர்ச்சி பெறவில்லை. மூன்றாண்டுகளில் தொடர்ந்து நிலைமைகள் பாரதூரமாக மோசமடைந்திருக்கும் இப் பொறியியற் பீடம் இனி முன்னேறும் என்பதில் நம்பிக்கையில்லை. மேலே சுட்டிக்காட்டப்பட்டது போன்று தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஏனைய பீடங்களுக்கு நேர்ந்திருக்கும் நிலையே இன்று எமது பொறியியற் பீடத்திற்கு நேரும் என்பதில் மாணவர் எமக்கு எவ் வித ஐயமும் இல்லை.

மேலும், இந்தப் பிரதேசத்தின் பாரிய பொறியியற்/தொழில்நுட்பத் (Engineering/Technology) துறை சார் செயற்திட்டங்கள் யாவும் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றது. ஒலுவில் துறைமுக கட்டுமானப்பணிகள் 46.1 மில்லியன் யூரோ செலவில் ஆரம்பிக்கப்பட்டது, ஆனால் எந்தக் கப்பலும் இன்று இங்கு கரை தட்டுவதில்லை. மனித நடமாட்டமின்றி அநாதரவாக்கப்பட்ட நிலையில் இத் துறைமுகம் மறக்கப்பட்டிருக்கின்றது. மகாபொல கடற் துறை தொழில்நுட்ப பயிற்சி நிலையம் பெரும் பொருட் செலவில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் இழுத்து மூடப்பட்டிருந்தது. இதை முதலாம் அணி பொறியியல் மாணவர்களே பல ஆண்டுகளின் பின்னர் சுத்தம் செய்திருந்தனர். தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் ஒன்று இயக்கப்பட முடியாத ஒலுவில் பிரதேசத்தில் எப்படிப் பொறியியற் பீடமொன்று இயக்கப்பட முடியும்?

மாணவர் நிலைப்பாடு

ஜனவரி 2015 இன் பின்னர், புதிய ஜனாதிபதி, புதிய பிரதம மந்திரி, புதிய உயர் கல்வி அமைச்சர், புதிய பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுத் தலைவர், பல்கலைக்கழகத்தில் புதிய உப வேந்தர் என்போர் பதவியேற்றிருக்கின்றனர். எமது நிலைப்பாட்டிலோ எதுவித மாற்றமும் ஏற்படவில்லை. எமது கல்வித் தரம் சார்ந்த நியாயமான நிலைப்பாடுகளை நாம் விரிவுரையாளர்களிடமும், பீடாதிபதியிடமும், பீடத்தின் உயர் குழுக் கூட்டங்களிலும், உப வேந்தரிடமும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக எடுத்துச் சொல்லி வந்திருக்கின்றோம். 2013 ஒக்டோபர் மாதம் எமது பீடத்திற்கு வருகை தந்த உயர் கல்வி அமைச்சர் இன்று நாம் கோடிட்டுக் காட்டியிருக்கும் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். பல்கலைக்கழகத்தின் முன்னை நாள் உப வேந்தரும் பல வாக்குறுதிகளை வழங்கிய போதும் எதையும் நிறைவேற்றவில்லை. புதிய உபவேந்தரின் ஆட்சிக் காலப் பகுதியிற் கூட நிலைமைகள் மோசமடைந்திருக்கின்றதேயன்றி முன்னேறவில்லை. இன்று மாணவர் எம்மிடம் எஞ்சியிருப்பது நிறைவேற்றப்படா வாக்குறுதிகள் மாத்திரமே.

இப் பீடத்தின் பிரச்சினைகளான பீடம் ஆரம்பிக்கப்பட்ட விதம், பீடத்தின் அமைவிடம், பீடத்தினால் சிறந்த விரிவுரையாளர்களைத் திரட்ட முடியாமை என்பன பீடத்தின் நிர்வாகிகளாலோ, பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தினாலோ தீர்க்கப்பட முடியா முறை சார் பிரச்சினைகள். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் தலைவர் கூட இப் பீடத்தினை ஆரம்பிக்க எடுத்த முடிவு சந்தேகிக்கத்தக்கது என்பதை ஏற்றுக் கொள்கிறார். உயர் கல்விக்கான இராஜாங்க அமைச்சரோடு நடந்த சந்திப்பில் இப் பீடம் பிழையான செயன்முறை ஒன்றினூடு ஆரம்பிக்கப்பட்டது என்று முன்வைக்கப்பட்ட கருத்திற்கு பொறியியற் பீடத்தின் நிர்வாகமோ, பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட நிர்வாகமோ முரண்பட்ட கருத்தொன்றை முன்வைக்கவில்லை. நாம் தொடர்பு கொண்டு பேசிய ஏனைய பொறியியற் பீடங்களின் சிரேஷ்ட விரிவுரையாளர்களும், வருகை விரிவுரையாளர்களும் கூட இந்தப் பீடத்தின் அமைவிடம் பொறியியற் பீடத்திற்குப் பொருத்தமற்றது என்பதை ஏற்றுக்கொள்கின்றனர். முக்கியமாக, இந்த மூன்றாண்டுகளில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதற்குப் பின்னரும் பொறுப்பான அதிகாரிகள் ஒலுவிலில் பொறியியற் பீடத்தை ஆரம்பித்து வைத்தது பாரிய தவறென்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். அதாவது z-புள்ளிப் (Z-score) பிரச்சினையைத் தீர்க்கவென அதிகாரிகளால் மற்றொரு தவறு இழைக்கப்பட்டது. உயர் மட்டங்களில் எடுக்கப்பட்ட பிழையான முடிவுகளுக்காக உயர் தரப் பரீட்சையில் திறமையாக ஆற்றலை வெளிப்படுத்தும் நாட்டின் சிறந்த மாணவர்களை பலியாக்குவது நியாயமற்றது. பீடங்களே மாணவர்களுக்கானவை: மாணவர்கள் பீடங்கங்களுக்கானவர்கள் அல்ல.

நாம் மேற்சொன்ன காரணங்களுக்காக இந்தப் பீடம் மூடப்படுவதே சிறந்தது என நாம் எண்ணுகின்றோம்.
இதனால்:

மாணவர் எம்மை அரசாங்கம் பொருத்தமான இடத்திற்கு இடமாற்ற வேண்டும் அல்லது ஏனைய பொறியியற் பீடங்களுக்குள் பகிர்ந்தளிக்க வேண்டும்.
2015 இல் தென் கிழக்குப் பல்கலைக்கழக பொறியியற் பீடங்களில் இணைக்கப்பட இருக்கும் மாணவர்கள் உடனடியாக ஏனைய பீடங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

என்ற கோரிக்கைகளை நாம் அரசாங்கத்திடமும், உரிய அதிகாரிகளிடமும் முன்வைக்கின்றோம். இங்கு கடமையாற்றும் விரிவுரையாளர்களுக்குமான ஈடு செய்யப்பட வேண்டும். இறுதியில், இந்த முடிவுகளைச் செயற்படுத்துவது இந்த நாட்டிற்கும், சந்ததி சந்ததியாக பொறியியல் பயில வரும் மாணவர்களுக்குமே நன்மை பயக்கும். அல்லாவிடின், நூறு நூறாக பொறியியல் மாணவர்கள் தரம் குன்றிய கல்விக்கு ஆளாக்கப்படுவர். இது தரம் குன்றிய பொறியியலாளர்களை மாத்திரமே உருவாக்கக் கூடியது. பொது மக்களது உழைப்பிலிருந்து திரட்டப்படும் நிதி அநாவசியமாக தரம் குன்றியதோர் பொறியியற் பீடமொன்றிற்கு உயிர் கொடுத்து வைத்திருக்க விரயமாக்கப்படும்.

அரசாங்கமும், உரிய அதிகாரிகளும் இது விடயத்தில் விரைந்து செயற்படுவார்கள் என எதிர்பார்க்கின்றோம்.

தென் கிழக்குப் பல்கலைக்கழக பொறியியற் பீட மாணவர்கள்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.