ஜனாதிபதியின் மீலாத் தின வாழ்த்துச் செய்தி

8611eec5630c4710f897df68cd6e28c0_Lஉலகெங்கிலும் வாழும் தமது சகோதர முஸ்லிம்களுடன் இணைந்து இலங்கை முஸ்லிம்களும் பேருவகையுடன் கொண்டாடும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளான மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பிவைப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று அனைத்துலக இஸ்லாமிய மக்களாலும் கொண்டாடப்பட்டு வரும் மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ் அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

இந்த நாள் ஒரு பெரும் சமய, கலாசார, நாகரிக பாரம்பரியத்தை கட்டியெழுப்புவதற்கு வழிவகுத்த சமாதானம் மற்றும் ஐக்கியத்தின் அடிப்படையில் அமைந்த பெருமானாரின் போதனைகளின்பால் முஸ்லிம்களின் கவனத்தை பெரிதும் ஈர்ப்பதாக அமைந்துள்ளது. இன்றைய பூகோல உலகில் பன்மைத்துவ சமூகத்திற்காக நபியவர்களால் பிரகடனப்படுத்தப்பட்ட ‘மதீனா சாசனம்’ நவீன உலகின் பல்வேறு கேள்விகளுக்கு பதில்தரும் ஒரு முக்கிய மூலமாகவுள்ளது.

அது கலாசார மற்றும் நம்பிக்கை வேறுபாடுகளின் அடிப்படையில் அமைந்த குழுக்களுக்கிடையே முரண்பாடுகளைத் தவிர்த்து, தீர்வுகளை கண்டடைவதற்கான அணுகுமுறைகளை முன்வைக்கிறது. சமயத்தில் பலவந்தம் பிரயோகிக்கப்படுவதை இஸ்லாம் நிராகரிக்கின்றது என்பதையும் மனித இருப்பு நெடுகிலும் பிணக்குகளைத் தீர்ப்பதற்கு மிகவும் பயனுறுதி வாய்ந்த வழி மத்தியஸ்த்தமாகும் என்பதையும் இந்த மதீனா சாசனம் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அது எல்லா சமூகங்களின் மத்தியிலும் பாதுகாப்பையும் நலனோம்புகையையும் உத்தரவாதப்படுத்துவதுடன், சமூகங்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கிறது. இஸ்லாம் மனித இனத்தை சகோதரத்துவம், பரஸ்பர புரிந்துணர்வு, ஒத்துழைப்பு மற்றும் சகிப்புத்தன்மையின் அடிப்படையிலான சரியான பாதையில் வழிகாட்ட விரும்புகிறது.

இலங்கையில் நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் போதனைகளை பின்பற்றுகின்றவர்கள் சகிப்புத் தன்மை, புரிந்துணர்வு மற்றும் நல்லிணக்கத்தால் வளம்பெற்ற ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்ய முடியும் என நான் நம்புகிறேன். இது நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதற்கான முயற்சிகளை பலப்படுத்தும் என்பது எனது நம்பிக்கையாகும்.

உங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சியான மீலாதுன் நபி வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.