
யுத்த காலத்தில் காணாமல் போனவர்கள் மற்றும் சிறைகளில் வாடுகின்ற அரசியல் கைதிகள் உள்ளிட்ட இளைஞர், யுவதிகள் எதிர்நோக்குகின்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நான் தீர்வுகாண்பேன்
. இந்தப் பிரச் சினைகள் எனது மனதில் பதிந்துள்ளன என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.நாட்டில் ஏனைய பிரதேசங்களில் இல்லாத அளவுக்கு வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது.போதைப்பொருள் என்பது ஆயுதத்தை விடவும் மிகவும் பயங்கரமானது. ஆகவே வடக்கு இளைஞர்கள் போதைப் பொருள் பாவனையை முழுமையாக இல்லாமல் செய்யவேண்டும் என்றும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்.புதுகுடியிருப்பு பிரதேசத்தில் நேற்றுஹைத்ரமணி ஆடைத் தொழிற்சாலையை திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் உரையாற்றுகையில்,மணல், சீமேந்து , கற்களினால் மாத்திரம் மனிதனினால் நிம்மதியான வாழ்க்கையை தேடிவிட முடியாது. நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வடக்கில் பல்வேறு குற்றச்செயல்கள் பரந்து காணப்பட்டன. யுத்தம் என்பது எமக்கு மிகவும் மோசமான அனுபவமாகும். யுத்தம் என்பது எவருக்கும் பிரயோசனம் தரக்கூடியது அல்ல.கடந்த முறை பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிசை சந்தித்த போது யுத்தம் தொடர்பில் என்னிடம் சில கேள்விகளை தொடுத்தார். யுத்தம் தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்ன என்று கேட்டார். யுத்தம் என்பது பாரிய அழிவாகும். அது மனித சமூகத்திற்கு தேவையற்ற ஒன்றாகும் என்று நான் கூறினேன். அப்போது அடுத்த வினாடியில் என்னிடம் இன்னுமொரு கேள்வியையும் தொடுத்தார். அதாவது உலகில் நிலவும் மோசமான யுத்தம் எவ்வாறு முடிவுறும் என்று தொடுத்த கேள்விக்கு நான் அழித்த பதிலை கேட்டு பாப்பரசர் சிரித்த முகத்துடன் என்னை பார்த்தார். அதன்பின்னர் பாப்பரசர் என்னிடம் சில வார்த்தைகளை கூறினார். அதாவது, யுத்தம் மனிதர்களினால் செய்யப்படுவதில்லை. மாறாக, குற்றவாளிகளே யுத்தம் செய்கின்றனர். யுத்தம் செய்பவர்கள் அனைவரிடம் ஆயுதம் இருக்கும் என்று நீர் நம்புகின்றீரா ? யுத்தத்தில் ஆயுதம் பிரயோகம் செய்யும் எவரும் ஆயுதம் தயாரிப்பதில்லை. ஆயுதத்தினால் ஒருவனுடைய உயிரை பறிக்கும் அதே நபருக்கும் ஆயுதத்தினால் தான் சாவு எற்படும். ஆயுதத்தை ஏந்தி யுத்தம் செய்பவர்கள் குற்றவாளி அல்ல. மாறாக ஆயுதம் தயாரிப்பவரே குற்றவாளி என்று பாப்பரசர் குறிப்பிட்டார்.ஆகவே வடக்கில் யுத்தக்காலத்தின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டடனர். இலங்கையில் இனிமேலும் யுத்தம் இடம்பெறுவதற்கு நான் இடமளிக்க மாட்டேன். நாட்டில் அனைத்து இனங்களுக்குமிடையில் நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்த வேண்டியுள்ளது. ஆகவே தேசிய நல்லிணக்கதை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் பூரண அர்ப்பணிப்புடன் செயற்படும். நாட்டில் யுத்தத்தை முழுமையாக ஒழித்துவிட்டு சமாதானத்தை ஏற்படுத்திய இராணுவ வீரர்களை எம்மால் ஒருபோதும் மறந்து விட்டு செயற்பட முடியாது.இந்த தொழிற்சாலையில் பணிப்புரிகின்ற இளைஞர் யுவதிகளை நான் சந்தித்து அவர்களிடம் உங்களுக்கு என்ன பிரச்சினை இருக்கின்றது என்று வினவினேன். அதற்கு அந்த இளைஞர்கள் அனைவரும் யுத்தக்காலத்தின் காணாமல் போனவர்களை மீட்டு தரவேண்டும். அதேபோன்று பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றே என்னிடம் கோரினர். வடக்கில் வாழும் இளைஞர்களினால் விடுக்கப்பட்ட அந்த இரண்டும் கோரிக்கைகளும் எனது மனதில் ஆழமாக பதிந்துள்ளன. இது தொடர்பில் தற்போது அரசாங்கம் உரிய வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. ஆகவே வடக்கு இளைஞர்களினால் சுட்டிக்காட்டப்பட்ட குறித்த பிரச்சினைகள் அனைத்தும் தீர்த்து வைக்கப்படும். அவற்றுக்கு நான் தீர்வுகாண்பேன்.அத்துடன் வடக்கு மாகாண இளைஞர் யுவதிகளின் வேலையற்ற பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கு ஏற்றால் போல் அதிகளவிலான முதலீடுகளை வடக்கிற்கு நாம் பெற்று தரவுள்ளோம். இந்த சந்தர்ப்பத்தில் வடக்கு இளைஞர்களிடம் விசேட கோரிக்கையொன்றறை நான் முன்வைத்தே ஆக வேண்டும். தற்போது நாட்டில் ஏனைய பிரதேசங்களில் இல்லாத அளவிற்கு வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. போதைப்பொருள் என்பது ஆயுத்தை விடவும் மிகவும் பயங்கரமானது. போதைப்பொருள் என்பது உயிரை கொல்லவல்லது. ஆகவே வடக்கு இளைஞர்கள் போதைப்பொருள் பாவனையை முழுமையாக இல்லாமல் செய்யவேண்டும்.வடக்கு, தெற்கு என்ற பேதமின்றி நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இதன்போது இந்தியாவின் முன்னாள் தலைவர் ஜவஹர்லால் நேருவின் கூற்றுபடி நாட்டின் தலைவராக நான் வரும்போது மக்கள் அனைவரதும் பிரச்சினைகளும் நாட்டு தலைவரின் பிரச்சினைகளாக மாறிவிடும். ஆகவே தற்போது நாட்டு ஜனாதிபதி என்ற வகையில் எனக்கு இரண்டு கோடி பிரச்சினைகள் உள்ளன. இவற்றை தீர்க்க வேண்டிய பாரிய பொறுப்பு என்னிடம் உள்ளது என்றார்.

