வித்தியா கொலை வழக்கில் சந்தேக நபர்கள் ஒன்பது பேர் இன்று யாழ் மேல் நீதிமன்றில்

வித்தியா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் ஒன்பது பேர் இன்று (புதன்கிழமை) யாழ் மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி வரையிலான மூன்று மாத காலத்திற்கு விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.
20160511_10151220160511_10151520160511_101517கடந்த ஒரு வருட காலமாக யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டு வந்த குறித்த வழக்கின் சந்தேக நபர்களை தொட்ச்சியாக ஒரு வருடத்திற்கு மேல் விளக்கமறியலில் வைப்பதற்கு சட்டத்தில் அனுமதியில்லை என்ற நிலையில், குறித்த சந்தேக நபர்களை மேலும் மூன்று மாதங்கள் விளக்கமறியலில் வைப்பதற்காக நீதிமன்றின் அனுமதியினைப் பெறும் பொருட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.
இதற்கமைய 9 சந்தேக நபர்களும் இன்றைய தினம் மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது 4ஆம், 7ஆம், 9ஆம் சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணி சரத் வெல்கம முன்னிலையாகி அவர்களை பினையில் விடுதலைச் செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். அத்துடன், 1ஆம், 2ஆம், 3ஆம், 6ஆம், 8ஆம் சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணிகள் யாரும் ஆஜராகாத நிலையில், பாதிக்கப்பட்டர் சார்பில் சட்டத்திரணி ரஞ்சித் குமார் நீதிமன்றில் பிரசன்னமாகியிருந்தார்.
1ஆம், 2ஆம், 3ஆம், 6ஆம், 8ஆம் சந்தேக நபர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதோடு சந்தேக நபர்கள் 9 பேரினதும் விளக்கமறியலை மூன்று மாத காலத்திற்கு நீடித்து நீதவான் தீர்ப்பளித்தார். இதன்போது, நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பில் குறிப்பிடுகையில்,
‘சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்படுமானால் சாட்சியங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படலாம், விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காத நிலைமை ஏற்படலாம். விசாரணைகளுக்கு இடையூறுகள் எற்படுத்தப்படலாம், முக்கியமாக மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதுமாத்திரமன்றி சட்டமா அதிபர் திணைக்களத்தின் கோரிக்கைக்கு அமைய இவர்களின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்படுகின்றது.
இந்நிலையில், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் துரிதகதியில் விசாரணைகளை நடத்தி அறிக்கைகளை மன்றில் சமர்ப்பிப்பதுடன், ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் விரைவில் விசாரணைகளை முடிவிற்கு கொண்டு வரவேண்டும். தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு மன்றில் அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் வெளியில் உறவினர்களிடமோ, ஊடகங்களிடமோ எதுவிதமான கருத்துக்களையும் விமர்சனங்களையும் தெரிவிக்க கூடாது.
இது நீதிமன்ற செயற்பாடுகளையும், சட்டத்தினையும் மீறும் செயலாகும். அவர்கள் ஏதேனும் கூறவிரும்பினால் அதனை நீதிமன்றில் தெரிவிக்கலாம். அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும். மாறாக வெளியில் கருத்து கூறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் எச்சரித்தார்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.