
நோர்வே மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவுகள் மீள புதுப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு வருகை தந்த நோர்வேயின் பிரதமர், இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தல் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.
நோர்வேயின் பிரதமர் ஏர்னா சொல்பர்க், இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டமையிலான இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மீள புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும், பொருளாதாரம்,தொழிநுட்பம் மற்றும் மீன் பிடி துறை அபிவிருத்தி தொடர்பிலும் நோர்வே ஒப்புதல் வழங்கியுள்ளது.
அத்துடன் நோர்வேயின் ஓய்வூதிய நிதியம் வேறு அபிவிருத்தி திட்டங்களுக்காக முன்னரே ரூபா 31 பில்லியனை முதலீடு செய்திருந்ததாகவும்,மேலும் புதிய அபிவிருத்தி திட்டங்களுக்காக முதலீடுகள் வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015 இல் இருந்து இலங்கை பொருளாதாரம்,அரசியல் சீர்திருத்தங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் முன்னேற்றமடைந்து வருவதாகவும்,காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பில் வெற்றிகரமாக செயற்பட்டு வருவதாகவும் நோர்வேயின் பிரதமர் ஏர்னா சொல்பர்க் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் அபிவிருத்திக்காக 1977 ஆம் ஆண்டிலிருந்து நோர்வே தன் பங்களிப்பை வழங்கி வருகின்றமைக்கு ஜனாதிபதி நன்றிகளை தெரிவித்துள்ளார்.
அத்துடன் நோர்வேயின் பிரதமர் நேற்றை தினம் மிரிஸ கடற்றொழில் துறைமுகத்தையும், காலி கோட்டையையும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.