ஆதிக்க அடையாளங்கள் தவிர்த்து தமிழர்களாக ஒன்றுபடுவோம். வடக்கு கிழக்கு தமிழர் பாரம்பரிய பூமி! ஈழம் எமது தேசம்! தனியரசு அமைப்பது எமது உரிமை!

எழுக தமிழ் கூறும் அரசியல்….Gnanasundaram Manoharan

புதிய திசைகள் தமிழர்களின் குரல்வளை முற்றாக நெரிக்கப் பட்டு விட்டது இனி அவர்கள் தமது உரிமை பற்றி வாய் திறக்கவே மாட்டார்கள் என்று இறுமாந்திருந்த சிறி லங்கா அதிகார சக்திகளுக்கு தமிழ் மக்கள் `எழுக தமிழ்` மூலம் பதிலளித்திருக்கிறார்கள்.

தமிழ் மக்கள் தாமாகவே அணிதிரண்டு தமது கோரிக்கைகளை முன்வைத்து ஒரு போராட்டம் ஒழுங்கமைக்கப்பட்ட தென்பதுதான் எழுக தமிழ் வெற்றியின் அடிப்படை. 2009க்கு பின் அரசியல் கோரிக்கைளின் அடிப்படையில் தமிழ் மக்கள் பெருமளவில் ஒன்றுகூடிய ஒரு நிகழ்வு என்றவகையில் இது முக்கியத்துவம் பெறுகிறது.

எழுக தமிழ் மூலம் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இன்று சிறி லங்கா அரசிற்கும் அதன் அடிவருடிகளுக்கும் சொல்லியிருக்கும் செய்தி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஒடுக்குமுறை இருக்கும் வரை தமிழ் மக்கள் போராடுவார்கள், போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதை தவறான சக்திகள் பயன்படுத்திக்கொள்வதை தடுப்பதும், மக்களை சரியான போராட்ட திசையில் பயணிக்க வைப்பதும் தமிழ் தேசிய நலனில், சமூக மாற்றத்தில் அக்கறையுள்ள அனைவரதும் கடமையாகும்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின் கடும் அரச ஒடுக்குமுறைக்கு மத்தியிலும், தமிழ் மக்கள் தங்கள் அரசியல் மற்றும் வாழ்வுரிமைக்கான போராட்டங்களை சாத்தியமான தளங்களில் நடத்தி வருகின்றனர். பெளத்த சிங்கள ஆக்கிரமிப்பு, நில ஆக்கிரமிப்பு ஆகியவற்றிற்கு எதிரான போராட்டங்களும்; காணாமல் போனோரை கண்டறிதல், அரசியல் கைதிகளின் விடுதலை, இன அழிப்பிற்கான சர்வதேச போர்குற்ற விசாரணை என்னும் கோரிக்கைகளை முன்வைத்து பரவலான போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

தமிழ் பகுதிகளில் சிறி லங்கா அரசினால் திட்டமிட்டு ஊக்குவிக்கப்படும் ஒழுங்கற்ற சமூக சூழலின் மீது கொண்டிருந்த தமிழ் மக்களது கோபம் வித்தியா கொலையின் தாக்கத்துடன் எதிர்ப்பு போராட்டமாக வெடித்தது. தமிழ் மக்கள் தாம் வாழும் அடக்குமுறை சூழலின் மீதும் அரசின் மீதும் கொண்டிருந்த வெறுப்பையும் விரக்தியையும் ஒருமித்த குரலில் இப்போராட்டம் காட்டி நின்றது. 2009 அழிவிற்கு பின் தமிழ் மக்கள் எழுந்துவர முடியாது, எழுந்துவர மாட்டார்கள்; “உரிமை பற்றி பேசாதே! அபிவிருத்தியும் சோறும் மட்டுமே கேட்டு பெற்றுக்கொள்” என்று கபடத் தனமாகப் பிரச்சாரம் செய்து வந்த சிறி லங்கா அரச முகவர்களின் நப்பாசைக்கு மாறாக இராணுவத்தால் முற்றாக சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும் வன்னி மக்கள் உட்பட தமிழ் மக்கள் தமது தேசிய உரிமைக்கான போராட்டங்களை பல வடிவங்களில் மேற்கொண்டு வருகிறார்கள்.

மக்களின் இவ்வகை கோரிக்கைகளுக்கும், போராட்டங்களுக்கும் ஈடுகொடுக்கமுடியாமல் திணறும் நிலையிலேயே இன்று தமிழ் தலைமை என அழைக்கப்படுபவர்களும், மக்கள் பிரதிநிதிகளும் உள்ளனர், எமாற்று அரசியல், சதி அரசியல், வாய்வீச்சு அரசியல், தரகர் அரசியல், உணர்ச்சி அரசியல் என இவர்களின் மக்கள் எதிர் அரசியல் நீள்கிறது. மக்களின் போராட்டக்களத்துடன் இணைந்து நிற்காவிட்டால் தனிமைப்பட்டு விடுவோம் என்று உணர்ந்த சந்தர்ப்பவாத அரசியல் சக்திகள் இந்த போராட்டத்தின் நிழலில் ஒதுங்கி நிற்பது தெரிகிறது. தமிழ் தேசத்தின் உரிமை போராட்டங்கள் தற்போதைய நிலையில் சாத்தியம், சாத்தியமில்லை என்னும் விவாதங்களுக்கு அப்பால் நீண்ட கால நலன்களைக் கணக்கிலெடுத்து திட்டமிட்டு நடத்தப் படவேண்டும். தமிழ் தேசத்தின் அரசியல் உரிமை எப்பொழுதும் ஆணையில் வைக்கப்பட வேண்டும். இடைக்கால தீர்வுகளும், தீர்வு பொதிகளும் வரவேற்கப்பட வேண்டிய அதேவேளை, அதுவே தமிழ் தேசத்தின் அரசியல் இலக்காகி விடமுடியாது. ஈழவிடுதலை போராட்டம் கடுமையாக ஒடுக்கப்பட்டிருக்கின்ற நிலையில், தமிழ் தேசிய ஜனநாயக இயக்கம் ஒன்று தோற்றம் பெற்றிருக்க வேண்டும்.

இன்றுவரை அது தோற்றம் பெறமுடியாத வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு முகாமாகவும் தமிழ் மக்கள் பேரவை இன்னொரு முகாமாகவும் புரிந்துணர்வின் அடிப்படையில் தமிழ் மக்களிடையே உள்ள வேறுபட்ட போராடும் சக்திகளை உள்வாங்கிக் கொண்டிருக்கின்றன. கூட்டமைப்பில் விரக்தியடைந்து எங்கே மக்கள் தனியாக போராட சென்றுவிடுவார்களோ என்பதற்கான ஒருவடிகால்தான் தமிழ் மக்கள் பேரவை என்பதையும் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

எம்மை ஒடுக்குபவர்கள் எம்மை விட பலமாக இருப்பதுடன், அடுத்து நாம் செல்லும் பாதையில் எம்மை தடுப்பதற்கு தன் சார்பானவர்களான எம்மவர்களை நிறுத்தி வைப்பதில் ஒடுக்குமுறையாளர்கள் வெற்றி கண்டு வருகிறார்கள். தமிழ் தேசத்தின் சுயநிர்ணய உரிமை கைவிடப்பட்டு, 6வது திருத்த சட்டம் தொடர்பாகவும் எந்த எதிர்ப்பு கோரிக்கையும் வைக்காது நடத்தப்பட்ட எழுக தமிழ் போராட்டத்திற்கும், சமஸ்டி என்னும் தீர்வை முன்வைத்த விக்னேஸ்வரனுக்கும் சிங்கள தேசத்தில் இருந்து எழுந்திருக்கும் இனவாத, மிரட்டல்கள், கண்டனக் குரல்கள் என்பன சிங்கள தேசம் இனவாதத்தின் கடையோடி நிலைக்கு சென்று விட்டது என்பதைதான் காட்டுகிறது. தமிழ் தேசம் வீழ்த்தப்பட்டு விட்டது அது இனி எழுந்திருக்கப் போவதில்லை என்னும் பகற்கனவில் அது இருந்திருப்பதாகவே தெரிகிறது.

ஒற்றை ஆட்சிக்குள் தீர்வு என்னும் வகையில் ஒரு தீர்வுப்பொதி தயாராகியுள்ள நிலையில், எப்பொழுதும் இல்லாத அளவிற்கு பெளத்த சிங்கள அரச முகவர்கள் குறிப்பாக; புலி எதிர்ப்பு, சாதியம், தலித்தியம், போலி இடதுகள், பிரதேச வாதிகள், இந்திய அரச முகவர்கள் என்போர் தனித்தனி அணிகளாக தங்களை இனம்காட்டி இயங்க ஆரம்பித்துள்ளனர். இது தீர்வுபொதியின் காரணகர்த்தாக்கள் யார் என்பதற்கான போட்டி என்பது ஒருபுறமிருக்க, சிறி லங்கா அரசின் நெருங்கிய நண்பர்கள் யார் என்பதற்கான போட்டியில் ஒருமுகாமும், தமிழ் தேசியத்துடன் யார் நெருக்கமானவர்கள் என்பதற்கான போட்டியில் இன்னோருமுகாமுமாக ஈடுபட்டுவருகின்றன.

முஸ்லீம் சந்தர்ப்பவாத தலைமைகள் தமிழ் மக்களின் எழுச்சிகளை கண்டு எச்சரிக்கை அடைந்திருப்பதுடன், வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பாக தங்களது தெளிவான எதிர்ப்பின் மூலம் தமது சந்தர்ப்ப வாதத்தையும் அரச விசுவாசத்தையும் உறுதிப்படுத்துகின்றனர். தமிழ் மக்கள் தமது தேசிய உரிமைக்கான போராட்டங்களை ஜனநாயக வழிமுறைகளில் பகுதியாகவும் கூட்டாகவும் ஆரம்பித்து விட்டார்கள், எழுக தமிழ் இதன் ஒரு திருப்புமுனையாக அமையட்டும்! ஈழ தேசத்தில் எம்மை பிரிவு படுத்தும் கூறுகளான பிரதேச ஆதிக்கம், சாதி ஆதிக்கம் தவிர்த்து ஈழதேசத்தவராக ஒன்றுபடுவோம். போராட்டங்களில் சாதிமத, பிரதேச ரீதியான ஆதிக்க அடையாளங்கள் தவிர்த்து தமிழர்களாக ஒன்றுபடுவோம். வடக்கு கிழக்கு தமிழர் பாரம்பரிய பூமி! ஈழம் எமது தேசம்! தனியரசு அமைப்பது எமது உரிமை! கடந்தகால தவறுகள் களைந்து அனுபவம் கற்று முன்னேறுவோம்! புதிய திசைகள்

Recommended For You

About the Author: northpole

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.