கொட்டாஞ்சேனையில் காணாமல்போன இரு தமிழர் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின

1280x720-2xxகொட்டாஞ்ச்சேனையில் இருந்து வெல்லம்பிட்டி நோக்கி தமது வேனில் கடந்த 2008 ஆம் ஆண்டு பயணிக்கும் போது கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட இரு தமிழர்கள் தொடர்பிலான விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் பல வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு கடத்தப்பட்டவர்களின் தொலைபேசியை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளிலேயே இந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளுக்கு பொறுப்பான சிறப்பு விசாரணை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த சில்வா கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸுக்கு அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று முன்தினம் நீதிவானுக்கு சிறப்பு விசாரணை அறிக்கை ஒன்றும் சமர்பிக்கப்பட்டுள்ள நிலையில், கடத்தப்ப்ட்டு காணாமல் ஆக்கப்பட்ட இரு தமிழர்களில் ஒருவரான கொழும்பு மாநகர சபை ஊழியர் இரத்னசாமி பரமானத்தனின் கையடக்கத் தொலைபேசியில் கடற்படை தளபதியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட சிம் அட்டை ஒன்றும் வடிவேல் பக்கிளிசாமி லோகநாதனின் கையடக்கத்தொலைபேசியில் லெப்டினன் கொமாண்டர் தயாநந்தவின் பெயரில் இருந்த சிம் அட்டையும் கடத்தலின் பிற்பட்ட காலப்பகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனைவிட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள மேற்படி ஒருவரும் பயணித்த வேனானது 72 துண்டுகளாக பிரிக்கப்பட்ட நிலையில் வெலிசறை கடற்படை முகாமின் இரகசிய அறையில் இருந்து மீட்கப்பட்டுள்ள நிலையில், அவ்வேனானது அங்கு இவ்வாறு ஒழித்து வைக்கப்பட்டமையை அப்போதைய கடற்படை தளபதி வசந்த கருணாகொடவும் உளவுப் பிரிவின் பணிப்பாளர் கெப்டன் ஹேவகேயும் நன்கு அறிந்திருந்ததாக விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த வேன் புகைப்படமெடுக்கப்பட்டு கடற்படை தளபதி வசந்த கருணாகொடவுக்கும் கெப்டன் ஹேவகேக்கும் வெலிசறை முகாம் அதிகாரிகள் அனுப்பியுள்ள நிலையில் அதனை தாம் பார்த்துக்கொள்வதாக கருணாகொட தெரிவித்த நிலையிலேயே வேனானது இவ்வாறு துண்டுதுண்டுகளாக பிரிக்கப்பட்டு இரகசிய அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்துள்ளது.

இது தொடர்பில் நேற்றைய தினம் கொழும்பு மேலதிக நீதிவான் நிசாந்த பீரிஸுக்கு அறிக்கை சமர்பித்த சிறப்பு விசாரணை அதிகாரி நிசாந்த சில்வா தெரிவித்ததாவது,

கனம் நீதிவான் அவர்களே, மேற்படி கடத்தப்பட்ட இருவரும் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறியே கடத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் நாம் விசாரணை செய்தோம். அனைத்து உளவுப் பிரிவுகளிடமும் மேற்படி கடத்தப்பட்ட இருவர் தொடர்பிலும் அறிக்கை கோரினோம். கடற்படை மற்றும் விமானப்படை தவிர்ந்த ஏனைய உளவுப் பிரிவுகளின் அறிக்கை எமக்கு கிடைத்துள்ளன. அந்த அறிக்கைகள் மேற்படி இருவரும் எவ்வித பயங்கரவாத தொடர்புகளையும் கொண்டிருக்கவில்லை என்பதை உறுதி செய்துள்ளன.

இந்த கடத்தல் தொடர்பில் ஆரம்பத்தில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரே விசாரணை செய்துள்ளனர். அந்த பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் விஜேசிங்கவை விசாரணை செய்தோம். அவரே இக்கடத்தல் தொடர்பில் விசாரணை செய்த விசாரணை அதிகாரி. அவருக்கு சரியாக விசாரணை செய்ய விடாது அப்போது அவரது உயரதிகாரியாக இருந்த அனுர சேனநாயக்க இடையூ செய்துள்ளமை அந்த விசாரணையில் தெரியவந்தது.

இந் நிலையிலேயே நாம் கடத்தப்பட்டவர்களின் கையடக்கத் தொலைபேசிகள் தொடர்பில் விசாரணை செய்தோம். இக்கையடக்கத் தொலைபேசிகள் ஏற்கனவே கைப்பற்றப்பட்ட நிலையில் அதில் ஒன்று கடற்படை தளபதியின் பெயரிலும் மற்றையது லெப்டினன் கொமாண்டர் தயாரத்னவின் பெயரிலும் பதிவாகியிருந்தன. அப்போது கடற்படை தளபதியாக வசந்த கருணாகொடவே செயற்பட்டுள்ளார்.

கடத்தப்பட்டோரது விபரங்கள், கடத்தல் மற்றும் அவரது வேன் துண்டாக்கப்பட்டு மறைக்கப்பட்டமை உள்ளிட்ட அத்தனை விடயங்களையும் வசந்த கருணாகொடவும் கெப்டன் ஹேவகேயும் அறிந்திருந்துள்ளனர். அவர்களுக்கு வேனின் புகைப்படம் காண்பிக்கப்பட்டுள்ளது.

இதனைவிட கடத்தப்பட்ட இரு தமிழர்களும் அணிந்திருந்த ஆபரணங்களும் அவர்களது உடைமைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளன. இதற்கும் கடற்படை புலனயவுப் பிரிவினருக்கும் நெருங்கிய தொடர்பிருக்கின்றது. சம்பவத்தில் குற்றத்துடன் தொடர்புடையோர் தொடர்பில் வெளிப்படுத்தப்படும் தகவல்களின் படி சந்தேக நபர்களை விரைவில் கைதுசெய்வோம். என்றார்.

இது தொடர்பிலான அடுத்த கட்ட விசாரணைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 24 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.