சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணை முறி விவகாரம் அர்ஜுன மகேந்திரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

d002211111ffffஇலங்கை மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி விவகாரம் தொடர்பாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் நேரடியாக பொறுப்புக் கூற வேண்டும். அவருக்கும் மத்திய வங்கியின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய பாராளுமன்றக் குழு (கோப்குழு) பரிந்துரை செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறிகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டிருந்த கோப்குழு இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் அதன் அறிக்கையை சமர்ப்பித்தது.

55 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கைக்கு கோப் குழுவில் அங்கம் வகிப்பவர்களில் 16 உறுப்பினர்கள் அடிக்குறிப்பின்றி அறிக்கைக்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.

அக்குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி, ரவூப் ஹக்கீம், அநுர பிரியதர்சனயாப்பா, தயாசிறி ஜயசேகர, லக்ஸ்மன் செனவிரட்ன, லசந்த அழகியவண்ண, அநுர திசாநாயக்க, சந்திரசிறி கஜதீர, மஹிந்தானந்த அழுத்கமகே, பிமல் ரத்நாயக்க, வீரகுமார திசாநாயக்க, எஸ்.ஸ்ரீதரன், எம்.ஏ.சுமந்திரன், நளிந்த ஜயதிஸ்ஸ, ஸ்ரீநேசன், மாவை சேனாதிராஜா ஆகியோர் ஏகமனதாக இணங்கியுள்ளனர்.

அடிக்குறிப்புடன் கூடிய அறிக்கைக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான ரவீந்திர சமரவீர, சுஜீவ சேனசிங்க, வசந்த அலுவிகார, கலாநிதி ஹர்சடிசில்வா, அஜித்.பி.பெரேரா, அசோக அபயசிங்க, அப்துல்லா மஹ்ரூப், ஹெக்டர் அப்புகாமி, ஹர்சன ராஜகருணா ஆகியோர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு இந்த அறிக்கையிலுள்ள பரிந்துரைகளுக்கு மேலுள்ள அனைத்து உறுப்பினர்களும் இணக்கம் வெளியிட்டுள்ள நிலையில் அவர்கள் அனைவரினதும் அறிக்கைகள் மற்றும் இணைப்புக்கள் சபைக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன. அதனையடுத்து குறித்த அறிக்கையில் காணப்படும் 15 பரிந்துரைகளும் சபையில் பகிரங்கப்படுத்தப்பட்டன.

அப்பரிந்துரைகளாவன,

2015 மற்றும் 2016 ஆகிய இரு வருடங்களிலும் இலங்கை மத்திய வங்கி மேற்கொண்ட பிணைமுறி வழங்கல்களில் எமது குழுவினால் ஆராயப்பட்ட 2015 பெப்ரவரி 27ஆம் திகதி கொடுக்கல்வாங்கல்களின் போது அப்போதைய மத்திய வங்கி ஆளுநராகவிருந்த அர்ஜுன மகேந்திரன் தலையீடு செய்தோ அல்லது அழுத்தத்தையோ மேற்கொண்டிருந்ததாகவோ நியாயமான சந்தேகம் ஏற்படக்கூடிய சாட்சியங்கள் மற்றும் காரணிகள் கோப் குழுவின் முன்னிலையில் வெளிப்பட்டுள்ளன என்பதை குழு அவதானித்துள்ளது.

கோப் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் சாட்சியங்கள் பற்றிய ஆராய்வுகளின் போது சில கொடுக்கல் வாங்கல்களில் உச்சபட்ச தூய தன்மை இருந்திருக்கவில்லையென்றும் அச்சந்தர்ப்பத்தில் செயற்பட்ட விதமானது இலங்கை மத்திய வங்கியின் நம்பிக்கையை பாதிப்படையச் செய்யும் வகையில் அமைந்திருந்தது எனவும் நியாயமான சந்தேகங்கள் தொடர்பான சாட்சியங்கள் மற்றும் காரணிகள் குழுவின் முன்னிலையில் வெளிப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.

அக்காலப் பகுதியில் இடம்பெற்ற பிணைமுறி கொடுக்கல் வாங்கல்கள் ஊடாக முதன்மை நிறுவனங்களில் ஒன்றான பேர்ப்பர்சுவல் ட்ரெசரிஸ் நிறுவனம் அதிக இலாபத்தை ஈட்டியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

அந்த மோசடி நடவடிக்கைகள் காரணமாக அரசுக்கும் பொது மக்களுக்கும் ஏற்பட்டிருக்கக் கூடிய இழப்பை பொறுப்புக் கூறவேண்டிய நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து அறவிடப்பட வேண்டும். அ த்தோடு அதற்குரிய நீதிமன்ற ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பரிந்துரை செய்யப்பட்ட தண்டனைகள் மற்றும் ஏனைய நிர்ணயங்கள் அதன் பிரகாரமே நடைமுறைப்படுத்துவதை ஆராயவும் உறுதிப்படுத்தவும் அது தொடர்பாக பின்னூட்டல்களை வழங்குவதற்கும் அவ்வாறான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் இருப்பதற்கும் உடனடியாக எடுக்கப்பட வேண்டிய சகல நடவடிக்கைகளையும் நடைமுறைப்படுத்தவும் அவற்றை மத்திய வங்கி உரிய முறையில் அமுல்படுத்துவதை ஆராயவும் உறுதிப்படுத்தவும் அதுதொடர்பில் பின்னூட்டல்களை வழங்கவும் நேரடியாக தலையிடவேண்டும். அது பாராளுமன்றத்துக்குரிய அரச நிதி நிர்வாகம் தொடர்பான அடிப்படை கடமையாகும். அவ்வாறு செய்வதன் மூலம் அரசுக்கு ஏற்பட்ட நட்டங்களை அறவிட்டுக் கொள்வதற்கு நடப்பில் உள்ள சட்டத்தின் கீழ் செயற்பட வேண்டியது பாராளுமன்றத்துக்குரிய பொறுப்பாகும்.

மீண்டும் இவ்வாறான நிலைமையொன்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்ங நோக்கில் இலங்கை மத்திய வங்கியினுள்ளும் அதனுடன் இணைந்த ஏனைய நிறுவனங்களினுள்ளும் பொருத்தமான பொறிமுறையொன்று நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பில் அந்த நிறுவனங்கள் பாராளுமன்றத்துக்கு உறுதியளிக்க வேண்டும்.

நாட்டின் நிதித் தேவையை பூர்த்தி செய்வதற்கு பொறுப்பான பிரதான நிறுவனமான மத்திய வங்கியின் நிதி கேள்விமனுக்கோரல்கள் வழங்கல்களின் போது அது தொடர்பான நடவடிக்கைகளை ஆராய்வதற்கும் தேவையான அனைத்து பின்னூட்டல்களை மேற்கொள்வதற்கும் ஜனாதிபதியினால் விசேட கண்காணிப்பு அணியொன்று உடனடியாக நியமிக்கப்பட வேண்டும்.

மத்திய வங்கி அதிகாரிகள் தனியொரு நிறுவனமான பேர்ப்பச்சுவல் ட்ரெசரிஸ் நிறுவனத்துக்கு மோசடியாக இலாபம் கிடைக்கக் கூடிய வகையில் செயற்பட்டமையும் முதன்மை வணிகர் என்ற வகையில் சம்பந்தப்பட்ட அந்த நிறுவனமும் அந்த இலாபத்தைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் செயற்பட்டமையும் மத்திய வங்கியின் நம்பிக்கை தொடர்பில் பாரிய பாதிப்பாக அமைந்திருக்கிறது. அந்த நிலைமை தொடர்பில் சட்டரீதியான அந்தஸ்துடன் கூடிய அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றின் மூலம் முழுமையான விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும். மீண்டும் அவ்வாறான நிலைமை ஏற்படாதிருப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

பிணைமுறி செயற்பாட்டின் மூலம் நாட்டுக்குத் தேவையான நிதியை தருவித்துக் கொள்ளும் செயற்பாடுகளின்போது அரசின் அவசர நிதித் தேவையை பூர்த்திசெய்யக் கூடிய அரச நிதி நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அது தொடர்பான ஏற்பாடுகள் மற்றும் சரத்துக்கள் மத்திய வங்கியின் நடவடிக்கை கையேடு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட ஏனைய ஆவனங்களில் உள்வாங்கப்பட வேண்டும்

இந்த விவகாரத்துடன் சம்பந்தப்பட்ட பேர்ப்பச்சுவல் ட்ரெசரிஸ் நிறுவனமானது முதன்மை வணிகர் என்ற வகையில் மிகவும் குறுகிய காலப்பகுதியினுள் அதிக இலாபத்தை ஈட்டியுள்ளது. அவ்வாறு இலாபம் ஈட்டப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் முழுமையான அதிகாரம் கொண்ட பொறிமுறையொன்றின் மூலம் விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும். அதன் மூலம் அவர்களது செயற்பாடுகளின் ஊடாக அரசுக்கும் மத்திய வங்கிக்கும் நிதி ரீதியான நட்டம் ஏற்பட்டுள்ளதா என்பதை உடனடியாக வெளிப்படுத்திக் கொள்வது மத்திய வங்கியின் பொறுப்பென்று கோப் குழு உறுதியாக நம்புகிறது.

எதிர்வரும் காலங்களில் இவ்வாறான நிலைமைகள் ஏற்படுவதைத் தடுக்க முதன்மை வணிகர்களின் சந்தை நடவடிக்கைகள் மற்றும் இரட்டை சந்தை செயற்பாடுகள் தொடர்பில் பின்னூட்டல்களை வழங்கும் பொறிமுறையொன்று நிறுவப்பட வேண்டும் அதன்மூலம் மத்திய வங்கி அரசின் நிதித் தேவைக்காக நிதி வழங்கல்களை மேற்கொள்ளும் விதம் பற்றி பின்னூட்டல்கள் மேற்கொள்வதற்கான இயலுமை கிடைக்கும்.

இதுவரை மேம்படுத்தல்கள் மேற்கொள்ளப்படாத அரச கடன்முகாமைத்துவத் திணைக்களத்தின் நடவடிக்கை கையேட்டை உடனடியாக மேம்படுத்த வேண்டும் என்பதுடன் அதில் பிணைமுறியின் நிமித்தம் அரசின் நிதி வழங்கலை மேற்கொள்ளும்போது அவ்வாறு நிதி வழங்கலை மேற்கொள்ளக் கூடிய அரச நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கும் ஏற்பாடுகளை உள்வாங்கப்ட வேண்டும்.

சர்ச்சைக்குரிய பிணை முறி விவகாரம் தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுனா மகேந்திரன் நேரடியாக பொறுப்புக் கூற வேண்டும். அவருக்கும் மத்திய வங்கியின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறான கொடுக்கல் வாங்கல்களின் போது வெளிப்படைத் தன்மை மற்றும் மத்திய வங்கியின் நம்பிக்கைத் தன்மையை பாதுகாத்துக் கொள்வதற்கு பொருத்தமான பொறிமுறையொன்றை ஏற்படுத்த வேண்டும் என்பதுடன் தற்பொழுது நடப்பில் இருக்கும் செலாவணி ஆணைக்குழு சட்டமூலம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட ஏனைய கட்டளைச் சட்டங்களை திருத்தம் செய்ய வேண்டும் .

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.