முஸ்லிம்களின் பரம எதிரி இஸ்ரேல், மைத்திரி ரணில் மங்களவுக்கு நண்பர்கள்”: கொழும்பில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

dddsc_3008ஜெருஸலேமில் அமைந்துள்ள அல் அக்ஸா பள்ளிவாசல் பலஸ்தீனுக்கு சொந்தமானது என தெரிவித்து யுனெஸ்கோ மாநாட்டில் பலஸ்தீ்ன் கொண்டுவந்த பிரேரணைக்கு அரசாங்கம் ஆதரவாக வாக்களிக்காமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு இன்று வெள்ளிக்கிழமை ஜுமாஆ தொழுகைக்கு பின்னர் இருவேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

முஸ்லிம் முற்போக்கு முன்னணி ஏற்பாடுசெய்திருந்த ஆர்ப்பாட்டம் கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலுக்கு முன்னால் இடம்பெற்றது. இதில் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எச்.எம்.அஸவர், குருநாகல் மாநகரசபை முன்னாள் உறுப்பினரும் முன்னணியின் தலைவருமான அத்துல் ஸத்தார் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

அதேவேளை கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசல் தலைவர் றியாஸ் ஸாலியின் ஏற்பாட்டிலான ஆர்ப்பாட்டம் நேற்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு பின்னர் பள்ளிவாசலுக்கு முன்னால் நடைபெற்றது. இதில் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி, ஐக்கிய சமாதான முன்னணியின் தலைவர் மிப்ளார், மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கூச்சல்

முஸ்லிம் முற்போக்கு முன்னணியினர் கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலுக்கு முன்னால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது அவர்கள் அரசாங்கத்துக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவண்னம் நல்லாட்சி என்னாச்சி, அரசாங்கத்துக்கு வாக்களித்தமைக்கு அரசாங்கம் முஸ்லிம்களுக்கு கொடுத்த பரிசுதான் பலஸ்தீனுக்கு எதிராக நின்றமை, முஸ்லிம்களின் எதிரி இஸ்ரேலுக்கு மைத்திரி ரணில் மங்கள நண்பர்கள், முஸ்லிம் அமைச்சர்களே ஏன் இன்னும் மௌனம், அமெரிக்காவே நாட்டில் இருந்து வெளியேறு. ஜனாதிபதியே மங்களவை பதவி நீக்கு போன்ற கோஷங்களை எழுப்பினர்.

இதேவேளை, முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் தலைவர் ஏ.எச்.எம். அஸ்வர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது தொழுகைக்கு வந்திருந்த சிலர் பாதையின் ஒரு பகுதியில் குழுமியிருந்து ஹூ குரல் இட்டதுடன் மஹிந்தவுக்கு சோரம் போகாதே, முஸ்லிம்களை காட்டிக்கொடுக்காதே என கூச்சலிட்டனர். இவ்வாறு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தை அவசரமாக முடித்துக்கொண்டு கலைந்து சென்றனர்.

அதேவேளை கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசல் தலைவர் றியாஸ் ஸாலியின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர்கள் யுனெஸ்கோ பிரேரணைக்கு ஆதரவளிக்காதமையை எதிர்த்து கோஷமிட்டதுடன் முஸ்லிம் தனியார் சட்டத்தில் கைவைக்காதே, அரசே ஜீ.எஸ்.பியை முஸ்லிம்களா இல்லாமலாக்கியது, உலக பயங்கரவாதி இஸ்ரேலுக்கு துணைபோகாதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி, ஐக்கிய சமாதான முன்னணியின் தலைவர் மிப்ளார், மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்தனர்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.