முஸ்லிம் நாடுகளின் ஆதரவை இலங்கை இழக்கும் : மங்களவை பதவி நீக்குங்கள் : அஸ்வர் தெரிவிப்பு

ahm-azwer-dfஅரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டால் உலக முஸ்லிம் நாடுகளின் உதவிகளை இழந்துவிடும். பலஸ்தீனுக்கு ஆதரவான பிரேரணைக்கு வாக்களிக்காத மங்கள சமரவீரவை வெளிவிவகார அமைச்சுப்பதவியில் இருந்து ஜனாதிபதி நீக்கவேண்டும் என முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார்.

பைத்துல் முகத்தஸ் அல் அக்ஸா விவகாரம் தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எதிர்த்து இன்று கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலுக்கு முன்னால் ஜும்ஆ தொழுகைக்குப்பின்னர் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

பைத்துல் முகத்தஸ் சம்பந்தமாக யுனெஸ்கோ மாநாட்டில் தாம் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு இணங்கவே வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலைமை வகித்ததாக வெளிவிவகார அமைச்சர் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். நாங்கள் குப்பை மேட்டின் மீது குற்றம் சாட்டினோம். ஆனால் அமைச்சர் மங்களவின் கூற்று முழு குப்பை மேட்டையும் கிளரி ஒட்டுமொத்த அரசாங்கத்தின் பக்கமும் துர்வாடை வீசுவதற்கு வழி வகுத்துள்ளது.

பைத்துல் அக்ஸா மரபுரிமை சொத்து என யுனெஸ்கோ எடுத்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்காமல் நடுநிலைமை வகித்தது நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கை என்பதை அவர் அறியச்செய்துள்ளார். முழு அரசாங்கமும் இதற்கு பொறுப்பு என்றால் யுனெஸ்கோ மாநாட்டில் நடுநிலைமை வகிக்கச்சொன்னது ஜனாதிபதியா அல்லது பிரதமரா என்ற கேள்விக்கு முஸ்லிம் சமுதாயம் விடை கேட்டு நிற்கின்றது.

எனவே வெளிவிவகார அமைச்சர் மட்டுமல்ல, முழு அரசாங்கமும் சயோனிச, இஸ்ரேல், அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுடன் கைகோர்த்து நிற்கின்றது என்பதை மங்கள சமரவீர வெட்டவெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார்.இது முஸ்லிம் மக்கள் மீது அரசாங்கம் விடுக்கும் அபாய எச்சரிக்கையாகும். முஸ்லிம்களுக்கு இந்த அரசாங்கம் பிரதி உபகாரமாக தருவது சயோனிச, அமெரிக்க மாயை மருந்தா என நாங்கள் கேட்க விரும்புகின்றோம்.

அத்துடன் சயோனிச சீ.ஐ.ஏ. காரர்கள் இலங்கையில் ஊடுறுவ ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கு முஸ்லிம் விரோத சக்திகளுக்கு பக்கபலமாக தோல் கொடுக்கின்ற மங்கள சமரவீர தொடர்பில் ஜனாதிபதி எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அத்துடன் ஜனாதிபதி மங்கள சமரவீரவை வெளிவிவகார அமைச்சுப்பதவியில் இருந்து நீக்கவேண்டும். அரசாங்கம் இவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்தால் உலக முஸ்லிம் நாடுகளின் உதவிகளை அரசாங்கம் இழந்துவிடும் அபாய நிலை ஏற்படும் என்றார்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.