இலங்கை தொடர்பான அமெரிக்க கொள்கையில் மாற்றம் ஏற்படாது! – அதுல் கேஷாப்

atul-keshap-380-seithyஅமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள போதிலும், இலங்கை தொடர்பான அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கையில் மாற்றங்கள் ஏற்படாது என கொழும்புக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப் தெரிவித்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிபீடம் ஏறியதும், இலங்கை தொடர்பில் தற்போது ஒபாமா தலைமையிலான அரசு கடைபிடித்துவரும் வெளிநாட்டுக் கொள்கைகள் மாற்றமடையுமா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கு பதிலளிக்கையிலேயே தூதுவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை தேசிய வெளிவிவகாரக் கொள்கையொன்றுக்கு அமையவே செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட தூதுவர் அதுல் கேஷாப், அதனால் தேர்தலுக்குப் பின்னர் அதிபர் மாறினாலும், வெளிநாட்டுக் கொள்கைகள் மாறாது என குறிப்பிட்டார். 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்காவில் மக்கள் எவ்வாறு தற்போதைய அரசாங்கத்திற்கு வாக்களித்திருந்தார்களோ அது போன்றே அமெரிக்க மக்களும் அமைதியான ஒழுங்குமுறையான அதிகார மாற்றத்திற்காக தமது வாக்குப்பலத்தை பயன்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

கடந்த 240 ஆண்டுகளாக தொடர்ந்து முன்னெடுக்கப்படும் இந்த மிகச்சிறந்த ஜனநாயக நடைமுறை மக்களின் விருப்பினை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது என்றும் பெருமிதம் வெளியிட்ட அமெரிக்கத் தூதுவர், ஜனநாயகத்தின் மீதான மக்களின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது என்றால் மிகையாகாது என்றும் குறிப்பிட்டார். அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கை என்பது அமெரிக்காவின் தேசிய நலன்களையும் அமெரிக்க தேசிய விழுமியங்களையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ள அவர், அமெரிக்க மக்களின் விழுமியங்கள் என்பது நிர்வாகங்கள் மாறுகின்றபோது மாறாது தொடர்ந்து உறுதியாகக் கடைபிடிக்கப்படும் ஒன்றாகவே இருந்து வந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஒபாமா, புதிதாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப மற்றும் ஹிலரி கிளின்டன் ஆகியோர் சிறப்பான செய்திகளை தேர்தலையடுத்து தெரிவித்திப்பதாகவும் அமெரிக்கத் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த உரைகளில் நாட்டை ஒருமைப்படுத்துவது, நோக்கங்களை ஒருமுகப்படுத்துவது ஆகியவற்றை வலியுறுத்தியிருந்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடைய இராஜாங்கத்திணைக்கள தொழில்சார் வாழ்க்கையில் வெளிவிவகாரக் கொள்கைகளில் பெருமளவில் தொடர்ச்சித்தன்மை இருந்ததையே அவதானித்துள்ளதாகவும் அதுல் கேஷாப் சுட்டிக்காட்டியுள்ளார். வெளிவிவகாரக் கொள்கையென்பது அரச நிறுவனங்கள், அமெரிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், அமெரிக்க அரசியல் சாசனம் ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்டதாக காணப்படுவதே இதற்குக் காரணம் என்றும் அவர் தெரிவத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி இதனடிப்படையிலேயே வெளிவிவகார கொள்கைமீதான அதிகாரத்தைக் தன்னத்தே கொண்டிருக்கின்றார் என்றும், அது எப்போதுமே அமெரிக்க மக்களின் விருப்பையும், நலன்களை விழுமியங்களைப் பிரதிபலிப்பதாகவே அமைந்திருக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை தன்னுடைய பதவிக்காலத்தில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் என்ன செய்ய விரும்புகின்றார் என்பதை பார்ப்பதற்கு அனைவரும் ஆவலாக இருப்பதாகவும் அதுல் கேஷாப் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.