சிறீலங்காப் படைகளில் சிறிதளவும் நம்பிக்கையில்லை – சிஐஏ இரகசிய ஆவணம்!

சிறீலங்கா படைகள் மீது தமக்கு பெரியளவில் நம்பிக்கை இல்லை என்று சிறீலங்காவின் முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெல், அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்ததாக, அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிஐஏ) இரகசிய ஆவணம் ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

1980களில், சிஐஏயினால் தயாரிக்கப்பட்ட பல இரகசிய ஆவணங்கள் வெளியிட அனுமதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து. சிறீலங்கா தொடர்பாக சிஐஏ தயாரித்த பல இரகசிய ஆவணங்கள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.

1986 செப்ரெம்பரில் சிறிலங்கா தொடர்பாக சிஐஏ தயாரித்த இரகசிய அறிக்கையில், அப்போது ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசாங்கத்தில் நிதியமைச்சராக இருந்த ரொனி டி மெல் அமெரிக்க அதிகாரிகளிடம் தனிப்பட்ட முறையில் வெளியிட்ட கருத்து இடம்பெற்றிருக்கிறது.

“அமைச்சரவையில் மிகவும் காத்திரமான உறுப்பினர்களில் ஒருவரும், – நிதி சார் முடிவுகளை எடுக்கும் முக்கியமான பங்கை வகிப்பவரும், ஆனால் அரசியல் மற்றும் இராணுவ முடிவுகளில் கனதியாகத் தொடர்புபடாதவருமான 61 வயதான ரொனி டி மெல், அமெரிக்க அதிகாரிகளிடம் தனிப்பட்ட முறையில் பேசும் போது, தாம் சிறீலங்கா ஆயுதப்படைகளிடம் சிறியளவு நம்பிக்கை மாத்திரமே கொண்டிருப்பதாக தெரிவித்தார் என்று அமெரிக்க தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொதுவாகவே, அமெரிக்காவை விமர்சிக்காமல் இருப்பதில் கவனமாக இருக்கும் ரொனி டிமெல் கடந்த ஏப்ரல் மாதம், தனது நாட்டுக்கு அருகில் இருக்கும் இந்தியா, ஏனைய சக்திகள் சிறீலங்காவுக்கு உதவுவதை விரும்பவில்லை என்று கூறியிருந்தார்” என்றும் சிஜஏ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்தியா தனது படைகளை துரிதமாக விரிவாக்கிக் கொண்டிருப்பதாகவும், சிறீலங்காவில் தலையீடு செய்வதற்கு அவற்றைப் பயன்படுத்தக் கூடும் என்றும் அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.

தனது கடல் எல்லைகளை பாதுகாப்பதற்கே படைகளைப் பலப்படுத்துவதாக புதுடெல்லி கூறியிருந்தாலும், சிறீலங்காவில் அரசாங்கம் வீழ்ச்சியடைந்தாலோ, அல்லது கிளர்ச்சியாளர்கள் சுதந்திர தமிழ் தேசம் ஒன்றை உருவாக்கினாலோ, தனது படைகளை சிறீலங்காவுக்கு அனுப்பும் என்று நாம் நம்புகிறோம்” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.