ஆலயங்களை காணவில்லை

article_1424000996-eவளலாய் பகுதியில் மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட பிரதேசத்தில் அமைந்திருந்த இந்து ஆலயங்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள் என 10க்கும் மேற்பட்ட ஆலயங்கள் இடித்து அழிக்கப்பட்டுள்ளதாக தங்கள் காணிகளை பார்வையிடச் சென்ற மக்கள் தெரிவித்தனர்.

உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து தற்போது விடுவிக்கப்பட்டிருக்கும் வளலாய் ஜே – 284 கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த 272 குடும்பங்கள் தமது காணிகளை வெள்ளிக்கிழமை(13) அங்கு சென்று அடையாளப்படுத்தினர்.

இதன்போதே அந்த மக்கள் இவ்வாறு கவலை வெளியிட்டனர். அவர்கள் தொடர்ந்து கூறுகையில்,

எமது கிராமஅலுவலர் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் அமைந்திருந்த இந்து கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், பல வீடுகள் ஆகியவற்றை இடித்தழித்த இராணுவத்தினர், அந்நிலங்களில் விவசாய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

பிரசித்தி பெற்ற இந்து ஆலயமான தேனார் ஓடை பிள்ளையார் கோவில் இடித்து அழிக்கப்பட்டுள்ளதுடன் அக்கோயிலின் தேர் மற்றும் வாகனங்கள் என்பவற்றுக்கு என்ன நடந்தது என தெரியவில்லை. அத்துடன் மேலும் சில இந்து ஆலயங்களும் இடித்து அழிக்கப்பட்டுள்ளன.

இடித்து அழிக்கப்பட்ட இந்து ஆலயங்களின் விக்கிரகங்களின் சிலவற்றை, பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இராணுவத்தினர் கொண்டு சென்று வைத்துள்ளனர்.

பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ தேவாலயமான லூதர் மாதா (மடு) தேவாலயமும் பலத்த சேதத்துக்கு உள்ளாகியுள்ளது. கடந்த 1990ஆம் ஆண்டுக்கு முன்னர் யாழில் இருந்த பிரசித்தி பெற்ற ஹோட்டல்களில் ஒன்றான ‘பாம் பீச்’ எனப்படும் ஹோட்டல் முற்றாக இடித்து அழிக்கப்பட்டுள்ளது.

அக்காலத்தில் பிரசித்தமான இந்த ஹோட்டல், இரண்டு மாடிகளை கொண்டு கடற்கரை ஓரமாக அமைந்திருந்தது. அந்த இரண்டு மாடி கட்டடமும் இடித்து அழிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல் இருந்ததற்கு அடையாளமாக ஹோட்டலின் நீர்த்தாங்கி மட்டுமே காணப்படுகின்றது.

பருத்தித்துறை – காங்கேசன்துறை வீதிகளை இணைக்கும் இந்த வீதியில் இரு மருங்கிலும் தென்னந்தோட்டங்கள் காணப்பட்டன. தற்போது அவை அழிக்கப்பட்டுவிட்டன என மக்கள் கூறினர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *