முத்தையன் கட்டு

முத்தையன் கட்டு என்னும் பெயர் வன்னியில் அனைவராலும் அறியப்பட்ட ஓர் பெயர். முத்தரையன் கட்டு என்பதே பின்னாளில் மருவி முத்தையன் கட்டு என்றாகிவிட்டது. முத்தையன் கட்டு என்பது பெரிய குளத்தின் பெயர். இதை முன்னாளில் முத்தரையன் என்பவரே கட்டினார் என்று சொல்லப்படுகின்றது. இங்கு குறிப்பிடக்கூடிய இன்னேர் விடயம் அரையன் என்பவர்கள் சோழர்களின் காலத்தில் பிரசித்தி பெற்ற சிற்றரசர்கள் ஆவார்கள். உதாரணமாக சோழர்களின் காலத்தில் பிரசித்தி பெற்ற சிற்றரசன் வானகோவரையனைக் குறிப்பிடலாம். சோழர்கள் காலத்திலேயே, அதாவது 11ம் நூற்றாண்டளவில் இக்குளம் கட்டப்பட்டிருக்கலாம் என்பதே முடிவு. இதற்கான வரலாற்று ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடப்படவேண்டும்.

இந்த குளத்தின் கீழ் 40,000 ஏக்கர் பயிர்செய்கைக்கு உரிய நிலம் உள்ளது. இக்குளத்தின் மூலம் மன்னாகண்டல்(புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் சாலையில் அமைந்துள்ள ஓர் கிராமம்) வரை நீர்பாசனம் செய்ய முடியும்.

முத்தையன் கட்டை இரண்டாகப் பிரித்துக் கூறுவார்கள்.L.B மற்றும் R.B. L.Bஎன்பது Left Bank அல்லது வலது கரை, R.B என்பது Right Bank அல்லது இடது கரை ஆகும். முத்தையன் கட்டுக் குளத்திற்கு இரண்டு துருசுகள்(நீர் திறந்து விடப் பயன்படும் இடம்) உள்ளன. இவை முறையே L.B மற்றும் R.B பகுதியில் உள்ளன.

முத்தையன் கட்டுக் குளத்தின் கீழ் பெரிய தாமரை மடு ஒன்று உள்ளது. இதைப் பெரும்பாலும் தாமரைக் குளம் என்றே அழைப்பார்கள். ஆனால் இதைக்குளம் என்று கூறுவது சரியானது அல்ல, இதை மடு என்று கூறுவதுதான் சரியாகும். ஏன் எனில் ஓர் முறை இக்குளத்தில் உடைப்பு ஏற்பட்டு விட்டது. இந்த உடைப்பைக் கட்டுவதற்கு குளத்தின் கீழே இருந்தே மண் எடுக்கப்பட, மண் எடுத்த இடத்தில் பெரிய பள்ளம் உருவானது. பின்னர் இதில் நீர் தேங்கி, இதுவே தாமரை மடு ஆனது. இந்த முறிப்பை(வளக்கமாக குளத்தின் உடைப்பு ஏற்பட்ட பகுதியை முறிப்பு என்றும் சொல்வார்கள்) கட்டிய ஒப்பந்தகாரர், முறிப்பைக் கட்டும் போது பெரும் ஊழல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இக்குளத்தில் நிர்ணயிக்கப்பட்ட நீர்க்கொள் அளவைவிட குறைவாகவே நீர் தேக்கப்படுகின்றது.

1970ம் ஆண்டளவில் அப்போதைய விவசாய மந்திரி R.பிரேமதாசா (பின்னாளில் ஜனாதிபதியாகவும் இருந்தவர்) தலைமையில் முத்தையன் கட்டுக் குளம் புனரமைக்கப்பட்டு, அதற்கு ஓர் பொறியியலாளரும் மற்றும் நீர்பாசனத் திணைக்களமும் ஒட்டுசுட்டானில் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்தை “முத்தையன் கட்டு scheme” என்றும் அழைக்கப்படும். முத்தையன் கட்டு scheme மின் வருகைக்குப் பின்னரே ஒட்டுசுட்டானில் க.பொ.த. உயர்தர வகுப்புடன் கூடிய ‘ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம்’ கட்டப்பட்டது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

மாங்குளம் வீதி, புதுக்குடியிருப்பு வீதி மற்றும் முல்லைத்தீவு வீதி ஆகியன சந்திக்கும் முச்சந்தியை அண்மித்த பகுதியிலேயே நீர்ப்பாசனத் திணைக்களம் அமைக்கப்பட்டது. அது வரையில் சாதாரண கிராமமாக இருந்த ஒட்டுசுட்டான் படிப்படியாக முன்னேற்றப் பாதையில் செல்லத் தொடங்கியது.

முத்தையன் கட்டு scheme மின் கீழ் ஏராளமானவர்கள், யாழ்பாணத்தில் இருந்து, முத்தையன் கட்டு scheme மின் கீழ் காணிகளைப் பெற்று, முத்தையன் கட்டில் குடியேறினார்கள். இவர்களில் பெரும்பாலனவர்கள் கடும் உழைப்பாளிகள். இதனால் ஏற்கனவே வளம் கொழிக்கும் பூமியான ஒட்டுசுட்டான், இன்னும் வளம் கொழிக்கும் பூமியாக மாறியது.

1995 ல் யாழ்பாணத்தில் இருந்து பெருமளவு மக்கள் அகதியாக்கப்பட்டனர். அரச உத்தியோகத்தவர்கள் எப்படியேனும் வாழ்ந்து விடுவார்கள். ஆனால் விவசாயிகள்? ஆம் அவ்வாறன ஏராளமான விவசாயிகளை அரவணைத்தது முத்தையன் கட்டு. (இவர்கள் யாழ் திரும்பிய பின்னர், அவர்கள் வாழ்ந்த இடம் மயானம் போல் காட்சி அழித்தது என்றால் மிகையாகது)

Recommended For You

1 Comment

  1. முத்தையன் கட்டு எனும் முத்தரையர் கட்டு குளம்,எதிர் காலத்தில் நீர்பாசன வளமை பெற வாழ்த்துகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.