இலங்கைத் தமிழர்களுக்கு மேலும் 47,000 வீடுகள்: மோடி

unnamed_34இலங்கைத் தமிழர்களுக்காக இந்தியா சார்பில் அடுத்த கட்டமாக 47,000 வீடுகள் கட்டித் தரப்படும் என்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அனைத்து குடிமக்களும் சமவளர்ச்சி அடையவும், சமமரியாதை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாக தமிழக ஊடகமான தினமணி குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கு இரு நாட்கள் சுற்றுப் பயணம் செய்த மோடி, வட பகுதிக்கு விஜயம் செய்தார்.

உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர், அதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதியான வடக்கிற்கு விஜயம் செய்யும் இரண்டாவது உலகத் தலைவர் மோடியாகும்.

முன்னதாக பொதுநலவாய மாநாடு இடம்பெற்ற வேளை இலங்கை வந்திருந்த பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமரூன் வடக்கு பகுதிக்கு விஜயம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, நேற்றையதினம் இலங்கையின் புராதன தலைநகரான அனுராதபுரத்தில், பேரரசர் அசோகரின் மகள் சங்கமித்தையால் இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்டு நடப்பட்ட மகாபோதி புனித மரத்தை பிரதமர் நரேந்திர மோடி வழிபட்டார்.

அவருடன் இலங்கை ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் பலரும் அங்கு சென்றனர்.

அதைத் தொடர்ந்து, ருவன்வெலிசாயவில், கி.மு. 140ம் ஆண்டில் கட்டப்பட்ட தூபிக்கும் பிரதமர் நரேந்திர மோடி சென்றார்.

இதனையடுத்து மோடி வடபகுதிக்கு விஜயம் செய்தார். யாழ்ப்பாணத்தின் இளவாழையில் இந்தியாவின் நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள 27,000 புதிய வீடுகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் மோடி கலந்து கொண்டார்.

அப்போது மோடிக்கு அங்கிருந்த பெண்கள், நாகசுர இசையுடன் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது: இங்கிருக்கும் வீடுகளிலுள்ள சுவர்கள், வெறும் செங்கற்களாலும், கற்களாலும் கட்டப்பட்டவை அல்ல. பாதிக்கப்பட்டோரின் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக்குவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையே இந்த வீடுகள் ஆகும்.

பாதிக்கப்பட்டோரின் கண்களில் இருந்து வரும் கண்ணீரை துடைக்கும் நபர் என்ற வகையில், இலங்கை சுற்றுப்பயணத்தின் கடைசி நிகழ்ச்சியாக இதில் பங்குபெறுவதை மகிழ்ச்சியாகக் கருதுகிறேன்.

புலம்பெயர்ந்த மக்களுக்காக (தமிழர்களுக்காக) அடுத்த கட்டமாக 47,000 புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என்பதை அறிவிக்கிறேன். இந்தத் திட்டம், ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த திட்டமாகும்.

குஜராத்தில் 2001ஆம் ஆண்டு நிலநடுக்கம் ஏற்பட்டபிறகு இதுபோன்ற வீடுகள் கட்டும் திட்டம் உதயமானது என்றார் மோடி.

முன்னதாக தலைமன்னார் ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய அரச நிறுவனமான ஐ.ஆர்.சி.என். நிறுவனத்தின் உதவியுடன் மதுசாலை – தலைமன்னார் இடையே அமைக்கப்பட்டுள்ள 63 கிலோ மீட்டர் தொலைவுள்ள பாதையில் ரயில் சேவையை மோடி தொடங்கி வைத்தார்.

மேலும் நேற்றைய யாழ் விஜயத்தின் போது மோடி, இந்தியாவின் நிதியுதவியுடன் கட்டப்படவுள்ள யாழ்ப்பாணம் கலாசார மையத்துக்கும் அடிக்கல் நாட்டினார்.

அத்துடன் யாழ்ப்பாணத்தில் உள்ள பொது நூலக அறையில், பிரதமர் நரேந்திர மோடியுடன், வடக்கு முதல்வர் விக்னேஷ்வரன் தனியே ஆலோசனை நடத்தினார் என தினமணி கூறியுள்ளது.

இதனிடையே, யாழ்ப்பாணத்தில் உள்ள நகுலேஸ்வரம் கோயிலிலும் மோடி வழிபாடு நடத்தினார்.

பின்னர் கொழும்பு வந்த மோடி இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் சந்தித்தார்.

அதனைத் தொடர்ந்து தனது இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, கொழும்பில் இருந்து பிரதமர் மோடி சனிக்கிழமை இரவு இந்தியா திரும்பினார்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.