வடக்கு மாகாண சபையுடன் இணைந்து செயற்படுவோம்; விஜயகலா

Screen Shot 2015-03-15 at 14.53.53வடக்கு மாகாண முதலமைச்சரின் வழியிலேயே நாங்களும் பின்தொடர்கின்றோமே தவிர எங்களுக்கு தரப்பட்ட அதிகாரங்களை தனிப்பட்ட முறையில் செலுத்த மாட்டோம் என ஐ.தே. க வின் நாடாளுமன்ற உறுப்பினரும் மகளிர் விவகார அமைச்சின் பிரதி அமைச்சருமான திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து சபையின் வடக்குமாகாணத்திலுள்ள யாழ். மாவட்ட சாலைகளுக்கான புதிய பேருந்துகள் கையளிக்கும் நிகழ்வு இன்று யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது.

அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த பல ஆண்டுகளாக ஒரு அரசு மட்டுமே ஆட்சியில் இருந்தது. இதனால் எங்களால் பல சேவைகளை செய்ய முடியாது இருந்துள்ளது. தற்போது எங்களுக்கு ஆட்சிமாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

எனினும் சிறுபான்மையின மக்கள் தான் இந்த ஆட்சியை மாற்றியிருக்கின்றோம். 100 நாள் திட்டத்தின் ஊடாகவே இந்த ஆட்சி அமைந்துள்ளது.

கடந்த காலத்தில் இருந்த ஆட்சியினால் வேறு பல அமைச்சர்கள் இருந்தமையால் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே வடக்கு மாகாணத்திலும் ஆட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.

அவர்கள் கூறுவது தான் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆட்சிமாற்றத்தில் அவ்வாறு இடம்பெறவில்லை.

கடந்த தேர்தலில் எமது முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கருத்துக்கு அமையவே வடக்கு மக்கள் வாக்களித்து ஆட்சியை மாற்றியிருக்கின்றார்கள்.

நாங்கள் முதலமைச்சரின் வழியில் தான் பின்தொடர்கின்றோமே தவிர எங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை தனிப்பட்ட முறையில் செலுத்தவில்லை. நான் செலுத்தவும் மாட்டேன்.

கடந்த அரசில் ஒருதலைப்பட்சமாகவே அனைத்து செயற்பாடுகளும் நடைபெற்றுள்ளன. சாலைகளுக்கு பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன . சாரதிகளும் நடத்துநர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

எனினும் அவ்வாறான செயற்பாடுகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐ.தே.க வுக்கும் சார்பாக இருந்த மக்கள் பழிவாங்கப்பட்டனர்.

அதனடிப்படையில் புதிய அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இதனையே அரசின் கவனத்திற்கும் கொண்டுவந்துள்ளேன்.

தற்போது வடக்கு மாகாணத்திலுள்ள மாவட்டங்களுக்கு 35 பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு தொகுதி பேருந்துகளை வழங்குவதாக போக்குவரத்து அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

அதேபோல ஊழிகள் நியமனமும் நடைபெறும். நியமனங்களில் எந்தவொரு அரசியல் தலையீடும் இன்றி அவர்களின் தகைமைகளுக்கேற்ப அவர்களுக்கு நியமனங்கள் ஓரிரு தினங்களில் வழங்கப்படவுள்ளன.

மேலும் பற்றாக்குறையாக இருக்கின்ற சாரதிகள் மற்றும் நடத்துநர்களும் நியமிக்கப்படுவர்கள். அத்துடன் கடந்த அரசினால் நியமிக்கப்பட்டு இன்றுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படாத ஊழியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்க போக்குவரத்து அமைச்சர் முன்வந்துள்ளார்.

அத்துடன் நீண்டகால பிரச்சனையாக இருந்து வரும் கிளிநொச்சி பேருந்து நிலையத்திற்கும் விரைவில் வடக்கு முதலமைச்சரூடாக தீர்வினைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

அதற்கமைய இ.போ.ச பேருந்து நிலையத்துக்கு உரிய காணியில் தற்போது பிரதேச சபை உள்ளது. எனவே வடக்கு முதலமைச்சருடன் இணைந்து அதனை பழைய கச்சேரிக்கு மாற்ற நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனவே 100 நாள் திட்டத்தில் இ.போ.ச பேருந்து நிலையத்தை கிளிநொச்சியில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்.

சில கிராமங்களுக்கு பேருந்து சேவை இதுவரை இல்லை. எனவே எந்த பாகுபாடும் இன்றி பொதுமக்கள் நடந்து செல்லும் இடங்களைக் கண்டறிந்து அவற்றுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

தீவகத்தில் பெரும்பாலான பகுதிகளில் இந்தப்பிரச்சினை உள்ளது. எனவே போக்குவரத்து சபை அங்குள்ள பிரேதே செயலகங்களுடன் தொடர்பு கொண்டு போக்குவரத்தனை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போக்குவரத்து மட்டுமல்ல பல்வேறு பிரச்சினைகள் வடக்கு மாகாணத்தில் உள்ளன. எனவே முதலமைச்சர் ஊடாக அவை அனைத்திற்கும் தீர்வு காண்போம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.