‘இலங்கைத் தேயிலைத் தொழிலாளர்கள் அதிகம் உழைக்க வேண்டும்’: கம்பனிகள்

120328152611_hatton_shannon_estate_protest_304x171_bbc_nocreditஇலங்கையில் தேயிலை மற்றும் ரப்பர் தொழில்துறை பெரும் வீழ்ச்சியை சந்தித்துவருவதாக பெருந்தோட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

பெருந்தோட்டத் தொழில்துறையை காப்பாற்றுவதற்கு தொழிலாளர்கள் தங்களின் தொழிற்திறனை அதிகரிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக பெருந்தோட்ட நிறுவனங்களின் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

தேயிலைத் தொழிலாளர்கள் வழமையில் நாள் ஒன்றுக்கு பறிக்கும் 18 கிலோ சராசரி தேயிலையின் அளவைவிட, 2 முதல் 3 கிலோ அதிகரிப்பை செய்தாலே தொடர்ந்தும் தேயிலை தொழிற்துறையை முன்னெடுத்துச் செல்லமுடியும் என்றும் அவர் கூறினார்.

ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு சந்தைகளில் ஏற்பட்டுள்ள தேயிலை விலைச்சரிவுகளே இலங்கைத் தேயிலை வருமானம் வீழ்ச்சியடையக் காரணம் என்றும் ராஜதுரை கூறினார்.

‘கொழும்பு ஏலவிற்பனையில் தேயிலையின் விலையில் 100 ரூபா வரையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தற்போது, உற்பத்திச் செலவுக்கும் விற்பனை விலைக்கும் இடையிலான நிகர வித்தியாசம் 30 முதல் 40 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது’ என்றார் ரொஷான் ராஜதுரை.

வழமையில் அதிகரித்துவருகின்ற ரப்பர் விலையிலும் 100 ரூபா வரை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சம்பள ஒப்பந்தம் 31-ம் திகதியுடன் முடிகின்றது.

‘கடந்த ஆண்டில் தேயிலையில் சுமார் 2 பில்லியன் ரூபாய் நட்டத்தை சந்தித்துள்ளோம். இறப்பரில் ஒரு பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டது. மொத்தமாக 3 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது’ என்றார் ராஜதுரை.

வெளிநாட்டுச் சந்தைகளில் நிலவும் விலை வீழ்ச்சிகளுக்கு அப்பால், உள்நாட்டிலும் உற்பத்திச் செலவுகளும் தொழிலாளர்களுக்கான ஊதியச் செலவுகளும் அதிகரித்துள்ளதாகவும் தோட்ட உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

‘புதிய சம்பள ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தையின்போது எங்களின் கோரிக்கையை நாங்கள் முன்வைப்போம். எங்களின் வருமானத்திலிருந்து தான் சம்பளத்தை வழங்கமுடியும். வெளியில் இருந்து பணத்தை கொண்டுவர முடியாது’ என்றார் ரொஷான் ராஜதுரை.

தோட்ட உரிமையாளர்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் உள்ள தொழிலாளர் சம்பள ஒப்பந்தம் இம்மாதம் 31-ம் திகதியுடன் முடிவுக்கு வருகின்ற நிலையில், புதிய சம்பள ஒப்பந்தம் தொடர்பான பேச்சுக்களும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்த சூழ்நிலையிலேயே, தொழிலாளர்கள் தங்களின் உற்பத்தித் திறனை பெருக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை தோட்ட உரிமையாளர்கள் முன்வைத்துள்ளனர்.

இலங்கையில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நீண்டகாலமாக பொருளாதார ரீதியில் பெருமளவு பின்னடைந்த சமூகமாக இருந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.